Aran Sei

‘கர்நாடகாவில் சிறுபான்மையினர்மீதான வன்முறைகள் கவலையளிக்கிறது’- முதலமைச்சருக்கு எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் கடிதம்

ர்நாடகாவில் தொடர்கதையாகியுள்ள மத சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் குறித்து கவலை தெரிவித்து, மூத்த விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், கலைஞர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் அடங்கிய குழு, பாஜகவைச் சேர்ந்த முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மற்றும் மாநிலத்தின் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது.

வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் முன்னாள் செயலாளரும், புவி இயற்பியலாளருமான பேராசிரியர் வினோத் கவுர், வழக்கறிஞரும் எழுத்தாளருமான ஃபிளவியா ஆக்னஸ், சமூக மானுடவியலாளரான பேராசிரியர் ஏ.ஆர்.வாசவி ஆகியோர் அடங்கிய 34 பேர் கொண்ட குழு எழுதியுள்ள இக்கடிதத்தில், நிதி, நிர்வாக மற்றும் அரசியல் துறைகளிலும் கூட்டாட்சி பலத்திலும் கர்நாடக மாநிலம் அதன் அடையாளத்தை இழந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியரை கொலை செய்த இந்துத்துவாவினர்: கர்நாடகாவில் சிறுபான்மையினர் மீதான வன்முறைகள் உச்சமடைகிறதா?

“இளைஞர்கள் கொடூரமாக கொலை செய்யப்படுவது, பரவலாகியுள்ள வெறுப்பு பேச்சுகள், பொது அமைதிக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், மத சிறுபான்மையினரின் வழிபாட்டிற்கு ஏற்படும் இடையூறுகள், ஆணவக் கொலைகள், மக்கள் பிரதிநிதிகளின் பெண்கள் விரோத அறிக்கைகள் மற்றும் பல்வேறு மதக் குழுக்களிடையேயான வன்முறைகளை மாநிலம் கண்டு வருகிறது” என்று அவர்கள் கூறியுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக, சட்டப்பேரவை உறுப்பினர்களின் அறிக்கைகளாலும், சமூக விரோத குழுக்களை கட்டுப்படுத்துவதில் மாநில அரசு இயந்திரத்தின் இயலாமையாலும் இந்தப் போக்குகள் ஊக்குவிக்கப்பட்டன என்று அக்கடிதத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இத்தகைய போக்குகள் முற்போக்கான மாநிலமான கர்நாடகாவின் நீண்ட வரலாற்றுக்கு எதிரானது என்று குறிப்பிட்டுள்ள அக்குழு, நம்முடைய சகிப்புத்தன்மையும் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்ட நல்வாழ்விற்கான மரபுகளும் அழிந்து வருவதாக தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் கல்லூரிக்குள் மதப் பாகுபாடு – ஹிஜாப் அணிந்த மாணவிகளை இரண்டு வாரமாக அனுமதிக்காத நிர்வாகம்

“பசு பாதுகாப்பு சட்டம், மதமாற்ற தடை சட்டம் போன்ற அன்மைய சட்டங்கள் மத சிறுபான்மையினரின் பொருளாதார மற்றும் பண்பாட்டு உரிமைகளுக்கு எதிரான படுகொலைகள் ஆகும். இனி நல்லிணக்கம், அமைதி, சகிப்புத்தன்மை ஆகியவை நம் மாநிலத்தின் தனிச்சிறப்புகளாக இருக்காது. இப்பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால், ஒரு வணிக மையமாக உள்ள கர்நாடகாவிற்கு எதிர்மறையான பாதிப்புகளைத் தரக்கூடும்” என்று அக்கடிதத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

“ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக, ஜனநாயக முறையில் அனைத்து சட்டங்கள், திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து விவாதிப்பது முதலமைச்சர் மற்றும் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களின் கடமையாகும். குறுகிய நோக்கோடு, மதவெறி கொள்கைகளை மட்டும் வலியுறுத்தும் பரிந்துரைகளை செயல்படுத்துவது மாநில நலன்களுக்கு எதிரானதாகவே இருக்கும்” என்று முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மற்றும் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் எழுதப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: New Indian Express

‘கர்நாடகாவில் சிறுபான்மையினர்மீதான வன்முறைகள் கவலையளிக்கிறது’- முதலமைச்சருக்கு எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் கடிதம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்