Aran Sei

விலங்கினங்களின் முன்னோடி காலத்தில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் நெருங்கியவை – புதிய ஆராய்ச்சி முடிவுகள்

Image Credit : thehindu.com

55 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உயிர் வாழ்ந்த டிக்சோனியா என்ற உயிரினத்தின் தொல்லுயிர் எச்சம், மத்திய பிரதேச மாநிலத்தின் போபாலுக்கு அருகில் உள்ள மத்திய இந்திய குகை கலை படிமங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பிட்ட, தொல்லுயிர் எச்சம் இந்தியாவில் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல்முறை என்று தி ஹிந்துவில் வெளியான கட்டுரை தெரிவிக்கிறது.

தொல்பொருள் எச்ச பாறைகளின் வயது ஐசோடோப்புகளை பயன்படுத்தி தீர்மானிக்கப்படுகிறது. மத்திய பிரதேசத்தின் மய்ஹார் மணல்பாறைகள் மீது நடத்தப்பட்ட ஜிர்கான் வயதுநிர்ணயித்தல் மூலம் அதன் வயது 54.8 கோடி ஆண்டு என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. கதிர்வீச்சு தனிம ஐசோடோப்புகள் சிதைந்திருக்கும் அளவை மதிப்பிடுவதன் மூலம் தொல்பொருட்களின் வயது நிர்ணயிக்கப்படுகிறது.

முன்னதாக டிக்சோனிய தொல்லுயிர் எச்சங்கள் ரசியாவிலும் தெற்கு ஆஸ்திரேலியாவிலும் கண்டறியப்பட்டிருந்தன. இன்றைக்கு சுமார் 63.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்து, 54.1 கோடி ஆண்டுகள் வரையிலான காலத்தில் டிக்சோனியாவும் பலவகையான பலசெல் உயிரினங்களும் பூமியில் வாழ்ந்திருக்கின்றன. இந்தக் காலகட்டம் பூமியின் வரலாற்றில் எடிகாரிய சகாப்தம் என்று அழைக்கப்படுகிறது.

ஒட்டு மொத்த உலகமும் சுமார் 1350 கோடி ஆண்டுகளுக்கு முன்பும், சூரியனும் அதன் கோள்களும் சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பும் தோன்றின என்று அண்டவியல் மூலமும், தொல்பொருள் ஆய்வு மூலமும் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் மனிதர்களைப் போன்ற மூதாதையர்கள் தோன்றியது சுமார் 70 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்துக்கும் 50 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்துக்கும் இடையே என்பது குறிப்பிடத்தக்கது.

டிக்சோனிய தொல்லுயிர்களின் குறிப்பிடத்தக்க ஒரு தன்மை, எலும்புக்கூடுகள் அல்லது மேல் ஓடுகள் போன்ற கடினமான பாதுகாப்பு அமைப்புகள் இல்லாதிருப்பது. அந்த காலத்தில் அவற்றை வேட்டையாடும் விலங்கினங்கள் இல்லாததது ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த காலத்தில்தான், மெட்டாசோவா அல்லது மிக ஆரம்ப நிலை பலசெல் உயிரினங்கள் வாழ்ந்திருக்கின்றன என்று தடயங்கள் காட்டுகின்றன. நிலத்தில் உயிரினங்கள் இல்லாத நிலையில் அவை நீரில் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

எடிகாரிய சகாப்தம், அதனைத் தொடர்ந்து வந்த காம்பிரியன் சகாப்தத்துக்கு முன் கட்டமாக இருந்திருக்கிறது. காம்பிரியன் சகாப்தத்தில் பூமியில் உயிர் வடிவங்கள் பெரும் எண்ணிக்கையில் உருவாகின. அவற்றில் பெரும்பாலானவை நவீன உலகின் விலங்கினங்களாக அமைகின்றன என்று தி ஹிந்து தெரிவிக்கிறது.

இந்தியாவில் எடிகாரிய காலத்திலிருந்தான முதல் தொல்லுயிர் எச்சங்கள் போபால் அருகில் உள்ள பிம்பேட்கா பாறை வாழ்விடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை விந்திய துணைக்குழு பாறைகளைச் சேர்ந்தவை. இது தொடர்பான ஆராய்ச்சியை கிரிகோரி ஜே ரிடாலாக் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு நடத்தியிருக்கிறது. இந்த ஆய்வு, கோண்ட்வானா ஆராய்ச்சி ஆய்விதழில் சென்ற ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்டதாக தி ஹிந்து தெரிவிக்கிறது.

இந்தியாவில் டிக்சோனிய தொல்லுயிர் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட மணற்பாறைகளின் வயது (சுமார் 54.1 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது), இதே போன்ற டிக்சோனிய தொல்லுயிர் எச்சங்கள் கண்டறியப்பட்ட ரசியாவின் வெண்கடல் பகுதியின் வயதுடனும் (சுமார் 55.5 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது), தெற்கு ஆஸ்திரேலியாவின் வயதுடனும் (55 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது) ஒப்பிடக் கூடியதாக உள்ளது.

மத்திய பிரதேசத்தின் பிம்பேட்காவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள பாறைகளின் தன்மைகளை ஆய்வு செய்த போது “பழைய யானை தோல்” கட்டமைப்பு போன்ற அவற்றின் பல தன்மைகள் தெற்கு ஆஸ்திரேலியாவின் பாறைகளின் தன்மைகளோடு ஒத்திருப்பது கண்டறியப்பட்டது என்று இந்த ஆராய்ச்சிக் கட்டுரை சுட்டிக் காட்டியுள்ளது.

இந்தியாவில் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ள டிக்சோனியன் தொல்லுயிர் எச்சங்கள், தெற்கு ஆஸ்திரேலியாவின் ரான்ஸ்லி குவார்ட்சைட் உடன் ஒத்திருக்கின்றன. அவற்றின் வயதுக்கான ஆதாரத்தையும், அந்த சகாப்தத்தில், கோண்ட்வானாலாந்தில் இரண்டு நிலப்பரப்புகளும் அருகருகில் இருந்திருக்க வேண்டும் என்பதையும் இது காட்டுகிறது.

இந்த ஆதாரம், துருவ நகர்வு நிகழ்வு (பூமியின் வரலாற்றில் கண்டங்கள் நகர்தலும் அதன் தாக்கங்களும்) தொடர்பான சரிபார்த்தல்களை உறுதி செய்வதாக இல்லை என்கிறது தி ஹிந்து.

டிக்சோனியாக்கள் விலங்குகளா அல்லது வேறு உயிரினமான என்ற விவாதம் தொடர்கிறது. இல்யா பாப்ரோவ்ஸ்கி தலைமையிலான ஒரு ஆராய்ச்சியாளர்களின் குழு, இந்த எச்சங்களில் கொலஸ்டீராய்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது அவை விலங்குகள் என்று காட்டுவதாக வாதிடுகின்றனர். ரிடலாக் மற்றும் அவரது சக ஆராய்ச்சியாளர்கள், இது போன்ற கொலஸ்ட்ரால்கள் சிவப்பு பாசிகளிலும் பெரும்பாலான பூஞ்சைகளிலும் காணப்படுகின்றன என்று எதிர் வாதம் வைக்கின்றனர்.

எடிகாரிய சகாப்தத்தின் உயிர்புவியியல் பற்றிய அறிவு இப்போதுதான் வளர்ந்து வருகிறது. இப்போது இந்தியாவும் இத்தகைய ஆராய்ச்சிகளின் ஒரு பகுதியாக மாறியுள்ளது. ஆனால், இந்திய துணைக்கண்டம் உலகத்தின் மிகவும் வேறுபட்ட ஒரு இடத்தில் இருந்த காலத்தைப் பற்றிய ஆய்வு அது என்று தி ஹிந்து தெரிவிக்கிறது.

விலங்கினங்களின் முன்னோடி காலத்தில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் நெருங்கியவை – புதிய ஆராய்ச்சி முடிவுகள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்