கொரோனா நோய்த்தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டு, குழந்தைகள் வீடுகளில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து சமூக ஆர்வலர்கள் கவலையடைந்துள்ளனர்.
முந்தைய ஊரடங்கின் போது தமிழகத்தில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. இதனால் பள்ளிகள் மூடப்பட்டிருந்தாலும், ஆசிரியர்கள் தொடர்ந்து மாணவர்களுடன் உரையாடி அவர்களின் நலன் குறித்து விசாரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.
“பள்ளிகளிலும் பாலியல் துன்புறுத்தல் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, ஆனால் வீட்டிலும் மாணவர்கள் பாதுகாப்பாக இல்லை. கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில், குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல், குழந்தை திருமணம் மற்றும் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளது.
மாணவர்களுடன் ஆசிரியர்கள் தொடர்ந்து உரையாடுவதன் மூலம் இதுபோன்ற சம்பவங்களை ஓரளவு குறைக்கலாம்” என்கிறார் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைக் கண்காணிப்பகம் ஒருங்கிணைப்பாளர் ஆண்ட்ரூ சேசுராஜ்.
2020 ஆம் ஆண்டில் கொரோனா தொற்றுநோயின் போது, தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 4.8% அதிகரித்துள்ளதாகத் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) தெரிவித்துள்ளது. குழந்தைகளைப் பாதுகாப்பதில் ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் பங்கு உண்டு என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
‘ஆதிக்க எதிர்ப்பின் அடையாளம்தான் ரோஹித் வெமுலா’ – ராகுல் காந்தி
“கிராம அளவிலான அதிகாரிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் போன்ற பிற அதிகாரிகளும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும்” என்று குழந்தை உரிமை ஆர்வலர் தேவநேயன் தெரிவித்துள்ளார்.
“கொரோனா தொற்றுநோய் மீண்டும் தீவிரமாகப் பரவி வருவதால் தமிழ்நாட்டின் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அவை எப்போது திறக்கப்படும் என்று தெளிவாகத் தெரியவில்லை. ஆகவே குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆசிரியர்கள் அவர்களின் வீடுகளுக்குச் சென்று மாணவர்களுடன் தொடர்பு கொள்ளலாம்,” என்று குழந்தை உளவியலாளர் ஸ்ரீஹரிணி கருத்து தெரிவிக்கிறார்.
பாலியல் துன்புறுத்தல் வழக்குகளைக் கையாள்வதற்காக உடனடியாக புகார் பிரிவுகளை அமைக்குமாறு அனைத்து நிறுவனங்களுக்கும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் இந்த உத்தரவுக்குப் பிறகு, கொரோனா தொற்றுநோய் காரணமாகப் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இது தொடர்பாக மாவட்ட அளவிலான கல்வி அதிகாரிகளுக்கு அரசு பயிற்சி அளித்துள்ளது. தற்போது, தலைமையாசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
Source : NewIndianExpress
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.