Aran Sei

‘ராமநவமி வன்முறைகள்’ – விசாரணை ஆணையம் அமைக்க கோரும் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

ராமநவமியின் போது டெல்லி ஜஹாங்கிர்புரி உட்பட எட்டு மாநிலங்களில் நடந்த வகுப்புவாத வன்முறை குறித்து விசாரிக்க நீதித்துறை ஆணையம் அமைக்கக் கோரிய பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வழக்கறிஞர் விஷால் திவாரி தாக்கல் செய்த அம்மனுவை நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ் மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (ஏப்ரல் 26) தள்ளுபடி செய்துள்ளது.

“முன்னாள் தலைமை நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டுமா? யாரேனும் ஓய்வாக இருக்கிறார்களா? நீங்களே கண்டுபிடியுங்கள். இது என்ன நிவாரணம். இந்த நீதிமன்றத்தால் வழங்க முடியாத நிவாரணங்களைக் கேட்காதீர்கள். இம்மனுவைத் தள்ளுபடி செய்கிறேன்” என்று அமர்வு கூறியுள்ளது.

ராமநவமி கலவரம்: குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் சொத்துகளை இடித்த ம.பி., பாஜக அரசு: கை இல்லாத நான் எப்படி கல் எறிய முடியும்? – கடையிழந்த வாசிம் ஷேக் கேள்வி

அண்மையில் நடந்த ராம நவமி பண்டிகையின் போது ராஜஸ்தான், டெல்லி, மத்தியப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்த மோதல்கள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடுமாறு வழக்கறிஞர் விஷால் திவாரி தனது மனுவில் கோரியிருந்தார்.

மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் உத்தரப் பிரதேசத்தில்  ‘புல்டோசர் நீதியின்’ தன்னிச்சையான நடவடிக்கை குறித்து விசாரிக்க இதேபோன்ற ஆணையத்தை அமைக்கவும் அம்மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

“இத்தகைய நடவடிக்கைகள் முற்றிலும் பாரபட்சமானது. ஜனநாயகத்திற்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் எதிரானது” என்று அம்மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

போபால்: கார்கோன் ராமநவமி கலவரத்தில் படுகொலை செய்யப்பட்ட இஸ்லாமியர் – 8 நாட்களுக்குப் பிறகு உடல் கண்டெடுப்பு

ஹனுமன் ஜெயந்தியன்று, ஜஹாங்கிர்புரி உள்ளிட்ட வடமேற்கு டெல்லியின் சுற்றுப்புற பகுதிகளில் வகுப்புவாத வன்முறைகள் நடந்தேறிய சில நாட்களுக்குப் பிறகு, பாஜக ஆளும் வடக்கு டெல்லி மாநகராட்சியானது ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி, ஜஹாங்கிர்புரி பகுதியில் உள்ள பல வீடுகளையும் கடைகளையும் புல்டோசர் கொண்டு ஏப்ரல் 20 அன்று இடித்துத் தள்ளியது.

Source: PTI

 

‘ராமநவமி வன்முறைகள்’ –  விசாரணை ஆணையம் அமைக்க கோரும் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்