தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆர்.என். ரவி ஆளுநரா ? சனாதன காவலரா என்று திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி தலையங்கம் வெளியிட்டுள்ளது.
அதில், தமிழ்நாட்டின் ஆளுநராக வந்தது முதல் ஆர்.என்.ரவி அவர்கள், உதிர்த்து வரும் கருத்துகள் மாநிலத்தில் அதிகமான குழப்பதையே அதிகம் விதைத்து வருகின்றன. அதுதான் அவரது உள்ளார்ந்த நோக்கமா எனத் தெரியவில்லை.
‘நீட்’ விலக்கு மசோதாவுக்கு அனுமதி தராமல் ஆளுநர் மாளிகையில் ஊறப்போட்டு வைத்து கோடிக்கணக்கான மக்களின் விரும்பத்துக்கு எதிராக இருந்தார். திரும்பத் திரும்பச் சொன்னபிறகு – அவர் திருப்பி அனுப்பியதை அவருக்கே திருப்பி அனுப்பிய பிறகுதான் – டெல்லிக்கு அனுப்பினார்.
அடுத்ததாக புதியக் கல்விக் கொள்கைக்கு பி.ஆர்.ஓ.போல மாறி அனைத்து அதனைப் பற்றிப் பேசி வருகிறார். புதிய கல்விக் கொள்கையைப் படிக்காமலேயே தமிழ்நாட்டில் எதிர்த்து வருகிறார்களாம். அவர் கண்டுபிடித்து இருக்கிறார். புதிய கல்விக் கொள்கை என்பது, ஒருவனை படிக்கத் தூண்டுவதாக இல்லாமல் – வெளியே துரத்துவதாக அமைகிறது. படிநிலைத் தடைகளை உருவாக்குகிறது. நுழைவுத் தேர்வுகளின் மூலமாக உள்ளே நுழையத் தடுக்கிறது. பணக்கார – உயர்நிலையினரின் வசதிக்கானது என்பதை அதை மேலோட்டமாகப் படித்தாலே தெரியும். ஆனால் அவர் தினமும் அதனை பரப்பிக் கொண்டு வருகிறார். இதற்கு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அவர்களே பல மேடைகளில் பதில் சொல்லி விட்டார்.
“புதிய கல்வி கொள்கை என்பது பாரதி தாசனும், பாரதியாரும் கனவு கண்ட புதிய இந்தியாவை உருவாக்கும் நோக்கம் கொண்ட புரட்சிகர ஆவணமாகும்” என்றும் அவர் சொல்லி இருக்கிறார். நல்லவேளை இதையெல்லாம் கேட்க வழி இல்லாமல் முன்கூட்டியே பாரதிதாசன் மரணித்துவிட்டார். பாவம் பாவேந்தர்!
திடீரென பாப்புலர் ப்ரெண்ட் இந்தியா என்ற அமைப்பைப் பற்றி ஒரு கல்லூரியில் பேசினார் ஆளுநர். அந்த அமைப்பின் மீது குற்றச்சாட்டு இருக்குமானால் அதற்குச் சட்டரீதியான விளக்கத்தைக் கேட்கலாம். அதைவிட்டு விட்டு அரசியல்வாதியைப் போல ஒரு ஆளுநர் பேசியது சர்ச்சையானது.
தேசம் என்பதை எந்தப் பிரிவினையும் இல்லாமல் பார்க்கிறாராம். அதாவது மாநிலம் என்று பிரித்து பார்கவில்லையாம். தேசத்தைப் பிரிவினை இல்லாமல் பார்ப்பவர் ஒரு மாநிலத்தின் ஆளுநராக இருக்க எப்படி ஒப்புக் கொண்டார் ? பா.ஜ.க.வுக்கு இந்தியா முழுமைக்கும் ஒரே தலைவர் நட்டா மட்டும் தானே இருக்க வேண்டும். அண்ணாமலை எதற்குத் தமிழகத் தலைவராக ? முதலில் அண்ணாமலையை நீக்கச் சொல்லி அல்லவா ஆளுநர் குரல் எழுப்ப வேண்டும். பி.சி. அணி, எஸ்.சி. அணி என்று எதற்காக அந்தக் கட்சிக்குள் ஆயிரம் அணிகள் ? இவை அனைத்துமே ஆளுநருக்கு எதிரானவை அல்லவா?
தபால்காரர் வேலையை ஆளுநர் சரியாக செய்ய வேண்டும்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து
இவை அனைத்தையும் விட ஆளுநர் உதிர்த்து வரும் ஆன்மிக – தத்துவ முத்துக்கள் அபத்தக் களஞ்சியமாக இருந்து வருகின்றன. அவரது ஆன்மிகம் என்பது அவரது உரிமை. அதில் நாம் தலையிட முடியாது. ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்னால் அவர் பேசிய பேச்சு என்பது – தன்னை சனாதனக் காவலராக காட்டிக் கொள்ளும் வகையில் பேசி இருக்கிறார். சனாதன சக்திகளின் பிடியில் அவர் சிக்கி இருக்கிறார் என்பதையே இதன் மூலமாக அறிய முடிகிறது.
வேற்றுமையில் ஒற்றுமை என நாட்டை பற்றி கூறுகிறோம். சனாதன தர்மமும் அதையேதான் கூறுகிறது. இந்தியாவில் ராணுவம், பொருளாதாரம் வளர்ச்சி அடைவதைப் போல ஆன்மிகத்திலும் வளர்ச்சி அவசியம். ஆன்மிகத்தின் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சியாக அமையும். இந்தியாவின் தலைமைத்துவம் ஆன்மிகத்தின் மீது நம்பிக்கை கொண்டதாக இருக்க வேண்டும் ஆன்மிகத்தில் வளர சனாதன தர்மம் வழி முறையாக இருக்கும்” என்று சொல்லி இருக்கிறார் ஆளுநர்.
இவருக்குச் சனாதன தர்மம் என்றால் என்ன என்றே தெரியவில்லை. சனாதன தர்மம் என்றால் என்ன என்று அவர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களிடம் தனிப்பட்ட முறையில் கேட்கவும் பூரி ஜகநாதர் கோவிலுக்குள் அவரைச் செல்லவிடாமல் தடுத்தது சனாதனம்.
“கடவுள் எங்கும் இருக்கிறார் என்று சொல்லிவிட்டு சகமனிதனை விலங்குகளைவிடக் கேவலமாக நடத்துவது சனாதனம். எறும்புக்குச் சக்கரை போட்டுவிட்டு, மனிதனின் குடிநீர் உரிமையை மறுக்கும் இத்தகைய கபட வேடதாரிகளின் நட்பு உங்களுக்கு வேண்டாம்” என்று சொன்னார் அண்ணல் அம்பேத்கர். இதுதான் சனாதனம். மனிதனை சாதியாக பிரித்து, சாதிக்குள் உயர்வு தாழ்வை புகுத்தி இன்னார்க்கு இன்னது என்று வகுத்தற்குப் பெயரே சனாதனம்.
அதிகார வரம்பை மீறும் ஆளுநர் ரவி: இது நாகாலாந்து அல்ல தமிழ்நாடு – எச்சரிக்கும் முரசொலி
தவம் செய்த சம்பூகன் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதற்காக அழித்தது சனாதனம். குரு இல்லாமல் ஆயுதப் பயிற்சி பெற்றதால் ஏகலைவனின் கட்டைவிரலைக் காணிக்கையாக வாங்கியது சனாதனம்.
‘நீட்’ என்பது சனாதனத்தின் நவீன வடிவம். புதிய கல்விக் கொள்கை புதிய மனு. இவை சமூகநீதிக்கு எதிரானவை
சனாதனத்தால் அதிகமாக நசுக்கப் பட்ட இனம் பெண்ணினம். மனுஸ் மிருதியை படித்தால் தெரியும். சனாதனத்தை ஆதரிக்கும் ‘ஆண் சனாதனிகள் தங்கள் வீட்டுப் பெண்களுக்கு மத்தியில் அதை படிக்க முடியுமா ? தங்கள் மகள்களைத்தான் அப்படிநடத்த முடியுமா? ‘பெண்கள் வேலைக்கு போனதால்தான் வேலையில்லா திண்டாட்டம் வருகிறது’ என்றும், ‘பெண்ணைத் தனியாக விட்டால் தப்பு நடக்கும்’ என்றும் இன்னமும் உட்கார்ந்து சிலர் கதாகலாட்சேபம் செய்து வருகிறார்கள்( இணையத்தில் இந்த காணொளிகள் இருக்கின்றன) அல்லவா இதுதான் சனாதனம். இதனைத்தான் ஆளுநர் விரும்புகிறாரா?
“சோமநாதர் கோவில் சொத்துகளை அழித்து கந்தகார், பெஷாவர் நகரங்களை கஜினி முகமது உருவாக்கினார். அந்த நகரங்கள் அமெரிக்க குண்டுகளால் தகர்க்கப்பட்டதில் இருந்து சனாதன தர்மத்தின் வலிமையை அறியலாம். ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியினாலும் | இந்த நாடு உருவாக்கப் பட்டது” என்றும் பேசி இருக்கிறார் ஆளுநர். என்ன சொல்ல வருகிறார் ? அதே போலக் குண்டு போடச் சொல்கிறாரா? ‘கிறிஸ்தவ’ அமெரிக்கா – ‘’சனாதன’ அமெரிக்காவாக ஆகிவிட்டது என்கிறாரா ? இனி அமெரிக்கா செய்யும் அனைத்துச் செயலும் சனாதனத்தைக் காப்பாற்றச் செய்யும் செயல்தானா ? பாகிஸ்தானுக்கு அவர்கள் உதவி செய்தாலும் அது சனாதனத் தொண்டா? என்ன பேசுகிறோம் என்பதைத் தெரிந்துதான் பேசுகிறாரா ஆளுநர்?
ஆளுநர் பேச வேண்டியது Rule of law தானே தவிர Rule of manu அல்ல!
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.