தாஜ்மஹால் வளாகத்திற்குள் நுழைந்து ‘ஹனுமான் சாலிசா’வை (ஆஞ்சிநேயர் பாடலை) முழங்க விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் முயன்றுள்ளனர்.
பள்ளி கல்லூரிகளில் மாணவர்கள் தங்களுடைய நம்பிக்கைக்கு ஏற்ப ஆடைகளை அணிவதைத் தடுக்க வேண்டும் என்றும் ‘ஹிஜாப்’ என்ற பெயரில் பிரச்சனை உருவாக்குபவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாஜ்மஹால் வளாகத்தில் உள்ள வாகன நிறுத்தத்தில் வைத்தே போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து விஷ்வ ஹிந்து பரிஷத்தின் பிரஜ் பகுதியின் துணைத் தலைவர் ஆஷிஷ் ஆர்யா கூறுகையில், “தாஜ்மஹாலை தேஜோ மஹாலே (சிவன் கோயில்) என நாங்கள் கருதுவதால், காவி உடை அணிந்து சென்று ஹனுமான் சாலிசா பாடுவோம் என அறிவித்திருந்தோம். ஆனால் காவல்துறை எங்களை தடுத்து விட்டனர்” என்று கூறியுள்ளார்.
“ஆக்ராவின் பல்வேறு இடங்களில், விஷ்வ ஹிந்து பரிஷத், சேவாபாரதி மற்றும் துர்கா வாஹினியின் தொண்டர்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். நான் சேவாபாரதி மற்றும் துர்கா வாஹினி உறுப்பினர்களுடன் சேர்ந்து ஹரிபர்வத் காவல் நிலையத்தில் ஹனுமான் சாலிசாவை முழக்கமிட்டேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
சேவாபாரதி அமைப்பைச் சேர்ந்த பாவனா ஷர்மா கூறுகையில், “நாங்கள் தாஜ்மஹால் வளாகத்தில் அமைதியான முறையில் ‘ஹனுமான் சாலிசா’ முழக்கமிட விரும்பினோம். நாங்கள் நுழைவு சீட்டு வாங்குவோம் என்று காவல்துறையினரிடம் சொன்னோம். ஆனால், நாங்கள் வாகன நிறுத்தத்திலேயே நிறுத்தப்பட்டோம்” என்று கூறியுள்ளார்.
“பள்ளிகளுக்கு என்று ஒரு ஆடைக் கட்டுப்பாடு இருக்கிறது. ஒவ்வொரு மாணவரும் அதைப் பின்பற்ற வேண்டும். ஹிஜாப் அணிவதற்கு ஆதரவாக செயல்படுபவர்களுக்கு எதிராக ஒரு எதிர்ப்பை பதிவு செய்வதே எங்கள் நோக்கம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Source: New Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.