தெருக்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கும் பணியைச் சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை மாநகராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களின் பெயர்ப் பலகைகளை சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மாற்றியமைக்கும் பணியைச் சென்னை மாநகராட்சி செய்து வருகிறது. அதன்படி, ரூ. 8.43 கோடி செலவில் தெருக்களின் பெயர்ப் பலகைகள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் முத்திரை, தெருவின் பெயர், வார்டு, பகுதி, மண்டலம், அஞ்சல் குறியீட்டு எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இந்த பெயர் பலகைகளில் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், இந்தப் பணியுடன் சேர்த்து தெருக்களுக்குச் சாதிப் பெயர்கள் இருந்தால் அவற்றை நீக்கும் பணியும் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, 171-வது வார்டில் உள்ள சாலையின் பெயரைச் சென்னை மாநகராட்சி மாற்றியமைத்துள்ளது.
13-வது மண்டலம், 171 வார்டில் உள்ள ஒரு தெருவுக்கு அப்பாவு கிராமணி 3-வது தெரு என்று பெயர் இருந்தது. இந்த பெயரை மாற்றக் கோரி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி, மாநகராட்சி உதவிப் பொறியாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த பெயரைச் சென்னை மாநகராட்சி தற்போது அப்பாவு (கி) தெரு என மாற்றியுள்ளது.
Source : Puthiyathalaimurai
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.