Aran Sei

பத்திரிகையாளருக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்த ஏபிவிபி உறுப்பினர் : கைது செய்த ராஜஸ்தான் காவல்துறை

ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான அகில பாரத வித்தியார்த்தி பரிசத்தைச்(ஏபிவிபி) சேர்ந்த  சட்ட கல்லூரி மாணவர், கொலை மற்றும் பாலியல் வன்புணர்வு செய்வதாக மிரட்டல் விடுத்ததையடுத்து ராஜஸ்தான் காவல்துறை அவரைக் கைது செய்துள்ளது.

மூத்த பத்திரிகையாளரும், தி வயர் இணையதளத்துக்கு கட்டுரை எழுதுபவருமான ரோகிணி சிங், டெல்லியில், குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர் பேரணி தொடர்பாகவும், காவல்துறைக்கும் விவசாயிகளுக்கும் நடந்த மோதல் தொடர்பாகவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவருடைய கருத்துக்களை பதிவிட்டிருந்தார்.

ரோகிணியின் கருத்துக்களை பார்த்து ஆவேசமடைந்த ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த கபில் சிங் விஜயன் என்பவர் ரோகிணியை பாலியல் வன்புணர்வு செய்து விடுவேன் என்றும் கொலை செய்து விடுவேன் என்றும் ட்விட்டரில் மிரட்டியுள்ளார்.

இந்நிலையில், சமூக வலைதளத்தின் வழியாகத் தனக்கு மிரட்டல் விடுத்த  அவரை உடனடியாகக் கைது செய்யக் கோரி பத்திரிகையாளர் ரோகிணி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிடமும், காவல் ஆய்வாளரிடமும் ட்விட்டர் வழியாகப் புகாரளித்திருந்தார்.

பாபர் மசூதியைப் பற்றிக் கவிதை: எழுத்தாளரின் ட்விட்டர் கணக்கு முடக்கம்

மேலும், ”கட்சிகளின் தகவல் தொழிற்நுட்ப பிரிவால் பரபரப்படும் வெறுப்பு பிரச்சாரங்களின் விளைவால் தற்போது சிறு குழந்தைகளும் கொலை மற்றும் பாலியல் வன்புணர்வு மிரட்டல்களை விடுக்க ஆரம்பித்து விட்டார்கள். அரசாங்கங்கள் சீரழிந்து வருகின்றன, இந்தத் தேசத்தின் ஆன்மாவைக் கொல்ல நினைக்கிறீர்களா? அல்லது ஒரே தேசம் சிந்தனை என்பதை அமல்படுத்த விரும்புகிறீர்களா? இந்த வெறுப்புணர்வு நாட்டை எங்கே எடுத்துச் செல்லப் போகிறது?” என அவர் ட்விட்டரில் கேள்வியெழுப்பியிருந்தார்.

‘வன்முறையைத் தூண்டுவதற்கு ட்விட்டரைப் பயன்படுத்த முடியாது’ – அதிபர் ட்ரம்ப்பின் கணக்கை நிரந்தரமாக முடக்கிய ட்விட்டர்

இதற்கு உடனே பதில் அளித்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், காவல்துறை இதை உடனடியாக விசாரிக்க உத்தரவிட்டிருந்தார். உதய்பூர் காவல்துறை இதை வழக்காக எடுத்துக் கொண்டு விட்டோம் என்றும் குற்றவாளியைத் தேடும் பணி தொடங்கி விட்டது என்றும் கூறியிருந்தனர். பின்னர் விஜயன் உதய்ப்பூரின் சீமாரி கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், பாஜகவின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தைச் சேர்ந்தவர் (ஏபிவிபி) என்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

ரோகிணி கைது செய்யக் கோரிய அடுத்த நாளே கபில் சிங் கைது செய்யப்பட்டதாக உதய்ப்பூர் காவல்துறை ட்வீட் செய்திருந்தது. இது தொடர்பாக அவர்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில், “மூத்த பத்திரிகையாளர் ரோகிணி சிங்கை கொலை மற்றும் பாலியல் வன்புணர்வு செய்து விடுவதாக மிரட்டிய கபில் சிங் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 506, 509 மற்றும் தகவல் தொழிற்நுட்ப சட்டம் 67 ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்” என ட்விட் செய்திருந்தது.

’அம்பானி, அதானியை புறக்கணிப்போம்’ – விவசாயிகளுக்கு ஆதரவாக ட்விட்டர் ட்ரெண்டிங்

உதய்ப்பூர் காவல்துறையின் விரைவான நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்திருந்த ரோகிணி, எதிர்கருத்து இருப்பதனாலேயே ஒருவருக்கு கொலை  மற்றும் பாலியல் வன்புணர்வு மிரட்டல் விடுக்க கூடாது. பொது வெளியிலும், இணையத்திலும் பெண்கள் செயல்படுவதற்கான பாதுகாப்பான தளங்களை உருவாக்க வேண்டும் என அவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

பத்திரிகையாளருக்குப் பாலியல் வன்புணர்வு மிரட்டல் விடுத்த நபர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தேசியக் கொடியையும் காவிக் கொடியையும் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பத்திரிகையாளருக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்த ஏபிவிபி உறுப்பினர் : கைது செய்த ராஜஸ்தான் காவல்துறை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்