சொந்த நாட்டு விவசாயிகளுக்கு மின்சாரம், தண்ணீர், இணைய சேவை ஆகியவற்றுக்கு தடை விதித்து, அவர்களைச் சுற்றி முள்வேலிகள் அமைத்துள்ளது பெர்லின் சுவரை நினைவுபடுத்துவதாக இருக்கிறது என்று காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் பிரதாப் சிங் பஜ்வா தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் பட்ஜெட் தொடர்பான விவாதத்தின் 6 வது நாளான இன்று (பிப்ரவரி 5) எதிர்க்கட்சி உறுப்பினர்கள் டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ள விவசாயிகளின் நிலைமைகுறித்து எடுத்துரைத்துள்ளனர்.
அப்போது பேசிய காங்கிரஸ் உறுப்பினர் பிரதாப் சிங் பஜ்வா, “விவசாய சட்டங்களை அமல்படுத்துகையில் எழும் எதிர்ப்புகளைத் தவிர்கும் நோக்கிலேயேதான் கொரோனா தொற்று நோயால் நாடு அவதியுற்றுக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்தச் சட்டங்களை மத்திய அரசு இயற்றியது. இது ஜனநாயக விரோத முறையாகும்.” என்று விமர்சித்துள்ளார்.
மேலும், “இன்று நாம் நம்முடைய சொந்த விவசாயிகளுக்கு மின்சாரம், தண்ணீர், இணைய சேவை ஆகியவற்றுக்கு தடை விதித்திருக்கிறோம். அவர்களைச் சுற்றி முள்வேலிகள் அமைத்துள்ளோம். இவையெல்லாம் பெர்லின் சுவரை நினைவுபடுத்துவதாக இருக்கிறது. இது உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டிற்கு வெட்கக்கேடான விஷயம்.” என்று பிரதாப் சிங் பஜ்வா கூறியுள்ளார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களைப் போராட்ட களத்திற்கு கூடச் செல்ல அனுமதிக்காமல், அப்பகுதியை ஒரு வதை முகாம்களைப் போல மத்திய அரசு பார்க்கிறது என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஷிரோமணி அகாலி தளத்தைச் சேர்ந்த சர்தார் சுக்தேவ் சிங் திண்ட்சா, “வேறு எந்தப் போராட்டங்களையும் போலல்லாமல், விவசாயிகள் போராட்டத்திற்கு தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் ஆதரவு கிடைத்துள்ளது. லட்சத்திற்கும் அதிகமானோர் போராட்டக் களத்தில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் நீதிக்கு தகுதியானவர்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
’ஷாஹீன் பாக்கை ஒடுக்கியது போல் எங்களை ஒடுக்க முடியாது’ – வேகமெடுக்கும் விவசாயிகள் போராட்டம்
டெல்லி எல்லைகளில் உள்ள விவசாயிகளின் நிலைமைகுறித்து கவலை தெரிவித்தள்ள பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் சதீஷ் மிஸ்ரா, “போராட்டக் களத்தில் தண்ணீரும் மின்சாரமும் நிறுத்தப்பட்டது மனித உரிமை மீறல். போராட்டத்தில் பெண்களும் இருக்கிறார்கள் என்பதைக் கூடப் பொருட்படுத்தாமல், அவர்களுக்கான தண்ணீரையும் மின்சாரத்தையும் நிறுத்தியிருக்கிறீர்கள். கழிப்பறைகளையும் கூட அகற்றிவிட்டீர்கள்.” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
தன்முனைப்பை (ego) தவிர்த்து விட்டு, விவசாய சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் நாட்டில் தேவையில்லாத குழப்பத்தை உருவாக்குவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்றும் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமனற உறுப்பினர் சதீஷ் மிஸ்ரா வலியுறுத்தியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.