விவசாய சட்டங்களை ரத்து செய்யுமாறு உங்கள் மகன் பிரதமர் மோடியிடம் வலியுறுத்துங்கள் என்றும் அவரின் மனதை மாற்ற ஒரு தாயாக உங்களுடைய எல்லா அதிகாரங்களையும் பயன்படுத்துங்கள் என்றும் மோடியின் தாயாருக்கு பஞ்சாப்பை சேர்ந்த விவசாயி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் கோலு கா மோ கிராமத்தைச் சேர்ந்த ஹர்பிரீத் சிங் என்பவர், நூறு வயதை நெருங்கும் பிரதமர் மோடியின் தாயாரான ஹீராபென் மோடிக்கு இந்தி மொழியில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், “நான் இந்தக் கடிதத்தைக் கனத்த இதயத்துடன் எழுதுகிறேன். மூன்று விவசாய விரோத சட்டங்களின் காரணமாக, நாட்டிற்கும் உலகத்துக்கும் உணவளிக்கும் விவசாயிகள் டெல்லியின் சாலைகளில் கடும் குளிரில் தூங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இதில் 90 வயதை கடந்தவர்களும் குழந்தைகளும் பெண்களும் அடங்குவர். குளிரால் அவர்கள் நோய்வாய்ப்படுகிறார்கள்.” என்று அவர் எழுதியுள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
“இந்தப் போராட்டத்திற்கு காரணம், அதானி, அம்பானி மற்றும் பிற கார்ப்பரேட் குடும்பங்களின் உத்தரவின் பேரில் இயற்றப்பட்ட மூன்று விவசாய விரோத சட்டங்கள்தான்.” என்று ஹர்பிரீத் சிங் அக்கடிதத்தில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
டெல்லி விவசாயிகள் போராட்டம் – மக்கள் அதிகாரம் குழுவினர் தமிழில் பாடி ஆதரவு
மேலும், “நான் இந்தக் கடிதத்தை மிகுந்த நம்பிக்கையுடன் எழுதுகிறேன். உங்கள் மகன் நரேந்திர மோடி இந்த நாட்டின் பிரதமர். அவர் நிறைவேற்றிய விவசாய சட்டங்களை அவரால் ரத்து செய்ய முடியும். சட்டங்களை ரத்து செய்யுமாறு உங்கள் மகனிடம் வலியுறுத்துங்கள். அவரின் மனதை மாற்ற ஒரு தாயாக உங்களுடைய எல்லா அதிகாரங்களையும் பயன்படுத்துங்கள். ஒரு தாயின் கோரிக்கையை யாராலும் மறுக்க முடியாது என்பதை நான் உணர்வேன். முழு நாடும் உங்களுக்கு நன்றி தெரிவிக்கும். ஒரு தாயால் மட்டுமே தன் மகனுக்கு உத்தரவிட முடியும்.” என்று ஹர்பிரீத் சிங் கோரியுள்ளதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.
ஹர்பிரீத் சிங்கும் தொடர்ந்து விவசாயிகளின் போராட்டத்தில் பங்கேற்று வருகிறார். சில நாட்கள் முன், சிம்லாவில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு, சிறிது நேரத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று பிடிஐ குறிப்பிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.