Aran Sei

வெளிநாட்டு அதிபர்களுக்கு பிரியாணி ஊட்டுவதால் வெளியுறவு கொள்கை வலுக்காது – மன்மோகன் சிங்

பிப்பிரவரி 20ஆம் தேதி, பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று(பிப்பிரவரி 17), பஞ்சாபி மொழியில் காணொளி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸுக்கு வாக்களிக்குமாறு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான மன்மோகன் சிங்கின் அக்காணொளியில், “அரசியல் ஆதாயங்களுக்காக நாட்டைப் பிரிக்கவோ அல்லது உண்மையை மறைக்கவோ ஒருபோதும் காங்கிரஸ் முயன்றதில்லை. ஒருபுறம், பணவீக்கம் மற்றும் வேலையின்மை போன்ற பிரச்சினைகளை மக்கள் எதிர்கொள்கிறார்கள். மறுபுறம், கடந்த ஏழரை ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் தற்போதைய அரசாங்கம், தங்கள் தவறுகளை ஒப்புக்கொண்டு அவற்றை சரிசெய்யாமல், நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவையே இன்னும் குற்றம் சாட்டிக்கொண்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் செலுத்துவதை அதிகரிக்க வேண்டும் – பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம்

“பிரதமரின் பதவிக்கு என்று ஒரு சிறப்பு முக்கியத்துவம் இருப்பதாக நான் உணர்கிறேன். ஒரு பிரதமராக இருந்துக்கொண்டு, உங்கள் சொந்த தவறுகளை மறைப்பதற்காக நீங்கள் வரலாற்றைக் குறை கூறக்கூடாது. நான் 10 ஆண்டுகள் பிரதமராக இருந்தபோது, ​​எனது பணிகள் வழியாகவே நான் பேசினேன். சர்வதேச சமூகத்தின் முன் நம் நாட்டின் மதிப்பை இழக்க நான் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. இந்தியாவின் பெருமையை நான் ஒருபோதும் குறைத்துவிடவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.

பலவீனமானவன், அமைதியானவன், ஊழல்வாதி என்று என்மீது சுமத்தப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்பிய பாஜகவும் அதன் பி மற்றும் சி அணிகள், மக்கள் முன் அம்பலப்படுகின்றன என்பதில் எனக்கு திருப்தி வருகிறது என்று மண்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

‘நேரு, இந்திரா, ராஜிவ், மன்மோகன் உருவாக்கிய கட்டமைப்பால் தப்பிப்பிழைக்கும் இந்தியா’ – கொரோனா பேரிடர் குறித்து சிவசேனா

“பாஜக தலைமையிலான அரசுக்கு பொருளாதாரக் கொள்கை பற்றிய புரிதல் இல்லை. வெளியுறவுக் கொள்கையிலும் இந்த அரசு தோல்வியடைந்துள்ளது. சீனா நமது எல்லையில் அமர்ந்து விட்டது. தலைவர்களை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடிப்பதாலோ, அவர்களுடன் ஊஞ்சலில் ஆடுவதாலோ அல்லது பிரியாணி ஊட்டுவதன் வழியாகவோ வெளியுறவுக் கொள்கையை செயல்படுத்த முடியாது என்பதை பிரதமர் புரிந்துகொண்டார் என்று நம்புகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் (காங்கிரஸ்) ஒருபோதும் அரசியல் ஆதாயத்திற்காக நம் நாட்டை பிளவுற செய்யவில்லை. உண்மையை மறைக்க முயற்சிக்கவில்லை. நாட்டின் மதிப்பையோ, பிரதமர் பதவியின் மதிப்பையோ நாங்கள் ஒருபோதும் தாழவிடவில்லை. மக்கள் இன்று பிளவுபடுகிறார்கள். இந்த அரசாங்கத்தின் போலி தேசியவாதம் ஆபத்தானது. அவர்களின் தேசியவாதம் என்பது பிரிட்டிஷாரின் பிரித்தாளும் கொள்கையை அடிப்படையாக கொண்டது. நாட்டில் உள்ள அனைத்து அரசியலமைப்பு நிறுவனங்களும் அவர்களால் பலவீனப்படுத்தப்படுகின்றன” என்று அக்காணொளியில் முன்னாள் பிரதமர் மண்மோகன் சிங் கூறியுள்ளார்.

வெளிநாட்டு அதிபர்களுக்கு பிரியாணி ஊட்டுவதால் வெளியுறவு கொள்கை வலுக்காது – மன்மோகன் சிங்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்