பஞ்சாப் சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தை கூட்டுவதற்கு பிறப்பித்த உத்தரவை அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திரும்பப்பெற்றுள்ளார். இது ஜனநாயகத்தை கொலை செய்யும் பாஜகவின் நடவடிக்கை என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
டெல்லியில் ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க பாஜக முயல்வதாகவும் தங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேரம் பேசுவதாகவும் குற்றம்சாட்டிய அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தாமாக முன்வந்து சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்குகோரினார். ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களின் நேர்மையை நிரூபிப்பதற்காக இதனைச் செய்வதாக கூறிய அரவிந்த் கெஜ்ரிவால், சட்டப்பேரவையில் தமது அரசுக்குள்ள பெரும்பான்மையை நிரூபித்திருந்தார்.
ஆம் ஆத்மி ஆளும் மற்றொரு மாநிலமான பஞ்சாபிலும் பாஜக மீது ஆட்சிக் கவிழ்ப்பு குற்றச்சாட்டை ஆம் ஆத்மி தலைவர்கள் எழுப்பினர். தங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களிடம் தலா 25 கோடி ரூபாய் வரை தருவதாக கூறி பாஜகவினர் பேரம் பேசுவதாக ஆம் ஆத்மி தலைவர்கள் குற்றம்சாட்டினார். இந்நிலையில் டெல்லி பாணியில் தாமாக முன்வந்து சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் முயற்சி எடுத்தார். ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் பாஜக பக்கம் தாவவில்லை என்பதை நிரூபிக்க சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்குகோர உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பஞ்சாப் முதல்வரின் கோரிக்கையை ஏற்று வரும் 22ந்தேதி நம்பிக்கை வாக்கெடுப்பிற்காக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை கூட்ட அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டார். இந்நிலையில் அந்த உத்தரவை அவர் தற்போது திரும்பப்பெற்றுள்ளார்.
பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக மட்டும் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட பஞ்சாப் சட்டப்பேரவை விதிகளில் இடமில்லை என சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் பிரதாப் சிங் பஜ்வா உள்ளிட்டவர்கள் அளித்த புகார் குறித்து சட்ட வல்லுநர்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. சட்டவல்லுநர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், 22ந்தேதி சிறப்புக் கூட்டத் தொடரை கூட்ட ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை ஆளுநர் திரும்பப் பெற்றுள்ளதாகவும் பஞ்சாப் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பஞ்சாப் ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி மாநில முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைச்சரவையால் எடுக்கப்பட்ட முடிவை ஆளுநர் எப்படி மறுக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், ஆபரேசன் லோட்டஸ் திட்டம் தோல்வி அடைந்துவிடும் என்று தெரிந்தவுடன் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை கூட்டுவதற்கான உத்தரவு திரும்பப்பெறப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
source: tribuneindia
A Raja Speech on Manusmriti is 100% Correct – Dr Sharmila | A Raja Speech About Manusmriti | Shudras
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.