Aran Sei

காஷ்மீர் பத்திரிகையாளர் ஃபஹத் ஷா கைது – பத்து நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

ம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்ட நீதிமன்றம், சமூக ஊடகங்களில் தேச விரோத கருத்துகளை பதிவேற்றியதாக குற்றச்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஃபஹத் ஷாவை பத்து நாள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாகவும், போலியான செய்திகளைப் பரப்பியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு, தி காஷ்மீர் வாலா செய்தி இணையதளத்தின் ஆசிரியர் ஃபஹத் ஷா தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்ட காவல்துறையால் நேற்று முன் தினம்(பிப்பிரவரி 4), கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், நேற்று(பிப்பிரவரி 5), புல்வாமா மாவட்ட நீதிமன்றம் ஃபஹத் ஷாவை பத்து நாள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டதாக அவரது வழக்கறிஞர் உமைர் ரோங்கா கூறியுள்ளார்.

ஃபஹத் ஷா மீதான குற்றச்சாட்டு என்ன என்பது இன்னும் தெளிவாக காவல்துறையால் தெரிவிக்கப்படாததால், ஃபஹத் ஷாவிற்கு பிணை கோரி மனு தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையின் பக்கம் நிற்பது தேசவிரோதமா? – காஷ்மீர் பத்திரிகையாளர் ஃபஹத்தின் கைதுக்கு மெஹபூபா முப்தி கண்டனம்

“திங்கள்கிழமைக்குள் (பிப்பிரவரி 7) அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் அவர்களிடம் (காவல்துறை) கேட்டுக் கொண்டுள்ளது. திங்கட்கிழமை அறிக்கை கிடைக்கும் என்று நம்புகிறோம். அப்போதுதான் அவர்கள் வைக்கும் குற்றச்சாட்டு என்னவென்று முழுதாக தெரிய வரும்” என்று உமைர் ரோங்கா தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஜனவரி 30 அன்று புல்வாமாவின் நைரா பகுதியில் என்கவுன்டரில் நான்கு தீவிரவாதி கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்திருந்தது. இந்த என்கவுன்டரில் கொல்லப்பட்ட ஒருவருடைய குடும்பத்தின் கருத்துகளின் அடிப்படையில் அந்த செய்தி இணையதளத்தில் ஒரு கட்டுரையை ஃபஹத் ஷா எழுதியிருந்தார். அக்கட்டுரை தொடர்பாக, ஃபஹத் ஷா காவல்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

என்கவுண்டரில் கொல்லப்பட்ட ஒருவரின் குடும்பத்தினர், கொல்லப்பட்டவர் தீவிரவாதி அல்ல என்றும் அவர் அப்பாவி என்றும் கூறியிருந்தனர்.

காஷ்மீர் என்கவுன்டர்: காவல்துறையின் விசாரணை அறிக்கையை நிராகரித்த கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர்

பத்திரிகையாளர் ஃபஹத் ஷா கைது செய்யப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்திருந்த ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) தலைவருமான மெகபூபா முப்தி, உண்மையின் பக்கம் நிற்பது தேச விரோதமாக கருதப்படுகிறது என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.

மேலும், “ஃபஹத்தின் பத்திரிகை பணியானது இங்குள்ள யதார்த்தத்தைச் சித்தரிக்கிறது. இதை ஒன்றிய அரசு விரும்பவில்லை. இன்னும் எத்தனை ஃபஹத்களை கைது செய்வீர்கள்?” என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

Source: PTI

காஷ்மீர் பத்திரிகையாளர் ஃபஹத் ஷா கைது – பத்து நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்