Aran Sei

புதுக்கோட்டையில் தலித் மக்களை கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுத்த ஆதிக்கச் சாதியினர் – ‘அரண்செய்’ யின் கள ஆய்வு

ர் பொதுக் கோவிலுக்குள்ள சாமி கும்பிட போன தலித் பெண்கள சாதிய சொல்லி திட்டி, அவமானப்படுத்தி வெளியே அனுப்பி, கோவிலையே பூட்டுன சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில நடந்திருக்கு.

இந்த சம்பவத்த கேள்விபட்டவுடனே கருப்பூடையான்பட்டி கிராமத்துக்கு “அரண் செய்” சார்பா போனோம்

இது புதுக்கோட்டை மாவட்டம், கருப்பூடையான்பட்டி கிராமத்தோட கதை.

கடந்தகால வரலாறு

அந்த காலத்தில் இதே கிராமத்தில் தீண்டாமையை எதிர்கொண்ட விதம் குறித்து பேசிய பெரியவர் மணி:

mani
மணி

தலித் மக்களுக்கு கொட்டாங்குச்சியில் டீ கொடுத்த தீண்டாமைக்கு எதிரா 20 வருஷத்துக்கு முன்னே போராடியிருக்கோம். போராட்டமா செய்யுறனு எங்கள ஊர விட்டே ஒதுக்கி வச்சாங்க. எல்லா கட்டுபாட்டையும் மீறி எங்களுக்கு உதவியா இருந்த உடையார் சமூகத்த சேர்ந்த எங்க முதலாளியம்மாவோட இறுதிச் சடங்குல கலந்துகிட்டோம். எங்கள விட பறையனும், சக்கிலியனும் முக்கியமா போயிட்டாங்களானு கோவமா சாவு வீட்டயே புறக்கணிச்சாங்க சாதியவாதிங்க. நன்றி கடனா இறுதி சடங்கையே நாங்க தான் எடுத்து நடத்துனோம். ஊரவிட்டு ஒதுக்கி வச்சி, எங்க இருப்பையே புறக்கணிச்ச சம்பவம் எங்களை மனவேதனைக்கு உள்ளாக்கிறுச்சி. சுயமரியாதையுடன் வாழ்வதே ஒரே வழினு நினைச்ச நாங்க பறை அடிப்பதில்லை, இறுதி சடங்குகளுக்கு வேலைக்குப் போறதில்லைனு முடிவெடுத்தோம்.

தமிழகத்தில் தீண்டாமை: மதுரை மாவட்டம் முதலிடம் – ஆர்டிஐ தகவல்

தற்போதைய கருப்புடையான்பட்டியின் நிலை:

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை, கருப்புடையான்பட்டி கிராமத்தில, மீனாட்சி அம்மன் கோயில் இருக்கு. இங்க 100 க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் வாழ்ந்து வராங்க. பெரும்பாலும் விவசாய கூலிகள், தினக் கூலிகள் தான். பல பத்து வருஷமா மீனாட்சியம்மன் கோவிலுக்கு வெளியேவே நின்னு சாமி கும்புடுறதாவும், திருவிழா நேரத்துல கூட காலனி தெருவுக்கு தேர் வராதுனும் நம்ம கிட்ட ஊர் மக்கள் சொன்னாங்க. ஏன்? ஊர்ல இருக்க சாதி இந்துக்களான உடையார், கள்ளர் உள்ளிட்டவங்க தங்கள கோவிலுக்குள்ள அனுமதிக்காம தீண்டாமை கடைபிடிக்கிறதாவும் அது தங்களுக்கு மனவேதனையா இருக்குனும் சொன்னாங்க. சரி முழுசா என்ன நடந்துச்சுனு பாப்போம்…

உத்திரபிரதேசத்தில் தீண்டாமை கடைபிடித்த பள்ளி தலைமையாசிரியர் – பணியிடை நீக்கம் செய்த நிர்வாகம்

கருப்புடையான்பட்டி, மாரியம்மன் கோயில் உள்ளே சென்று வழிபட தலித் மக்களுக்கு அனுமதி இல்லை. தங்களை கோவிலுக்குள் வழிபட அனுமதிக்க வேண்டும், 29/08/2022 நடக்கவிருக்கும் கும்பாபிஷேகத்தில் தலித் மக்கள் பங்கெடுப்பதை உறுதி செய்ய வேண்டி மாவட்ட ஆட்சியர் கவிதா ராமூவிடம் தலித் மக்கள் மனு அளித்துள்ளனர். இதற்கு தீர்வு கானும் விதமாக அதிகாரிகளின் துணையுடன் தலித்துகளை கோவிலுக்குள்ளே அழைத்து செல்ல உத்தரவிட்டார். இதை பாராட்டும் விதமாக தலித் மக்கள் ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டி மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்துள்ளார்கள்.

திருவிழா தினத்தன்று தலித் மக்களும் கோவிலுக்குள் சென்றுள்ளனர்.

“சின்ன வயசுல இருந்து வெளிய மட்டுமே நின்னு சாமி கும்பிட்ட எங்கள முதல் முதல்ல போலீஸ் துணையோட கோவிலுக்குள்ள கூட்டு போனப்ப எங்களுக்கு கிடச்ச அந்த சந்தோஷம் இருக்கே! நம்ப உரிமைய மீட்டுட்டோம்னு ரொம்ப பெருமையா இருந்துச்சு” என்றார் பட்டதாரியான தலித் பெண் முத்துமாரி.

முத்துமாரி

இனி கோவிலுக்குச் போவதற்கு நம்மை யாரும் தடுக்க போவதில்லை என்று நினைத்த 100 க்கும் மேற்பட்ட தலித்துகளுக்கு காத்திருந்தது ஒரு அதிர்ச்சி.

விழா நடந்து முடிந்த சில நாட்கள் கழித்து கடந்த 2/09/2022 அன்று இரு தலித் பெண்கள் மாரியம்மனை வழிபடக் கோவிலுக்குள் சென்றபோது அங்கிருந்த சாதி இந்து ஒருவர் அந்த பெண்களை சாதி பெயர் சொல்லி, இழிவாக பேசியுள்ளார்.

இது குறித்து நம்மிடம் பேசிய ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிட்ட சின்னதுரை “பறைச்சிக்கு கோவிலுக்குள்ள என்ன வேலனு திட்டி, ரொம்பவும் இழிவா பேசியும் விரட்டி அடிச்சி கோவிலையும் சாத்திட்டாங்க. அப்ப மூடுன கோவில இப்ப வரைக்கும் திறக்காம வச்சிருக்காங்க” என்றார்

சின்னதுரை

“ஒடுக்கப்பட்ட நாங்கள் உள்ளே வர எந்த பிரச்சனையும் இல்லை என்று போலீஸ் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் எழுதி கொடுத்த பிறகும் சாதி இந்துக்கள் அதே போல் தீண்டாமை கடைபிடிக்கிறார்கள். கும்பாபிஷேக நிகழ்வின் அன்று கூட நாங்கள் சாமிக்கு கொடுத்த தேங்காய்களை உடைக்கவில்லை. நாங்கள் கோவிலுக்குள் மீண்டும் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக இது வரை கோவிலை திறக்காமல் அவர்கள் மட்டும் திருட்டுத்தனமாக கோவிலுக்குள் சென்று வருகிறார்கள். கும்பாபிஷேகம் நடந்து முடிந்த பிறகு நடக்க இருந்த திருவிழாக்களில் நாங்கள் கலந்து கொள்ள கூடாது என்பதற்காகவே இந்த நாடகத்தை நடத்துகிறார்கள்” என்கிறார் கோவில் நுழைவு உரிமைக்காக போராடி வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கருப்புடையான்பட்டி மீனாம்பாள்.

மீனாம்பாள்

இது குறித்து பேசிய பெரியவர் மணி “புதிதாக கட்டப்பட்ட இந்த கோயிலுக்காக எங்களிடம் எந்த வரியும் வாங்கவில்லை. வரிகட்டிவிட்டால் கேள்வி கேட்போம், சமமாக வந்துவிடுவோம் என்ற காரணத்தினால் நன்கொடையாக தந்தால் மட்டும் போதும் என்று சொன்னார்கள். அந்த காலத்தில் நடந்த திருவிழாக்களில் கூட உடையார், கள்ளர், கவுண்டர் தெரு வழியாக சாமி செல்லும், ஆனால் எங்கள் ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதிக்கு வராது” என்றார்.

“எல்லா விதத்திலும் தாயா, பிள்ளையா பழகும் அவர்கள் கோவில் விஷயம் என்று வரும்போது மட்டும் எங்களை தாழ்த்தப்பட்டவர்களாகவே பார்க்கிறார்கள். அவர்களுக்கு கீழாகவே நாங்கள் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். நாங்கள் படிச்சிருக்கோம் அதனால் கேள்வி கேட்குறோம் எங்கள் அம்மா அப்பா போல் கேள்வி கேட்காமல் நாங்கள் இருக்க விரும்பவில்லை. எங்களுடையே ஒரே குறிக்கோள் எல்லோரும் சமமாக இந்த கோவிலுக்குள் சென்று வழிபட வேண்டும் அதற்கு மாவட்ட நிர்வாகம் துணை நிற்க வேண்டும்” என்றார் பட்டதாரியான முத்துமாரி.

பெயர் குறிப்பிட விரும்பாத உடையார் சமூகத்தை சேர்ந்த நபர் நம்மிடம் பேசிய போது “ஊர் கோவிலுக்கு உள்ளே செல்ல யாரும் தடை போட முடியாது. அது தவறு. படித்தாலும் எங்கள் சமூகத்தை சேர்ந்த சிலர் பழைமைவாதிகளாக இருக்கிறார்கள். தலித்துகள் உள்ளே வருவதை கவுரவ குறைச்சலாக நினைக்கிறார்கள். அவர்கள் கோவிலுக்குள் செல்லும் வரை நான் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பேன்” என்று தெரிவித்தார்.

சமூக விலக்கம் செய்யப்பட்ட பௌத்தக் குடும்பங்கள்: பட்டியலினத்தோர் பௌத்தம் மாறினால் தீண்டாமை ஒழிந்திடுமா?

தலித் பெண்களை சாதி குறித்து இழிவாக பேசிய நபர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் புகார் கொடுத்துள்ளார் சின்னதுரை. விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் தலைமைறைவாக இருந்த சாதி குறித்து பேசிய அந்த நபரை கண்டுபிடித்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தற்போது அவரிடம் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் புகார் கொடுத்த சின்னதுரை உள்ளிட்டவர்களின் சாதி சான்றிதழ்களை சரிபார்த்த கிராம நிர்பாக அலுவலகர் ரேணுகா “விசாரனை முடிந்ததும் தலித்துகள் கோவிலுக்குள் செல்ல பாதுகாப்பான சூழலை உருவாக்க மாவட்ட நிர்வாகம் எல்லா முயற்ச்சிகளையும் எடுப்போம்” என்று தெரிவித்தார்.

செய்தியாளர் : பியர்சன் லினேக்கர்

Kallakurichi -இல் தாக்கப்பட்ட Nakkeeran Prakash | பதறவைக்கும் Video | பின்னணியில் யார்? | Aransei

புதுக்கோட்டையில் தலித் மக்களை கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுத்த ஆதிக்கச் சாதியினர் – ‘அரண்செய்’ யின் கள ஆய்வு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்