Aran Sei

புதுச்சேரி: அரசுப் பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளிகளாக மாற்றப்படும் விவகாரத்தில் பாஜக குலக்கல்வியை திணிக்க பார்க்கிறது – புதுச்சேரி திமுக விமர்சனம்

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தால் இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ் தெரிந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல் போகும் சூழல் ஏற்படும். வட இந்தியர்களின் ஆதிக்கம் அதிகமாகும் என்று புதுச்சேரி திமுக விமர்சித்துள்ளது.

சமீபத்தில் புதுச்சேரிக்கு வந்த மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ”புதுச்சேரியில் இருக்கும் அரசுப் பள்ளிகள் அனைத்தும் விரைவில் சிபிஎஸ்இ பள்ளிகளாக மாற்றப்படும்” என்று கூறியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.

அரசியலோ அரசியல் – ராஜாஜியின் குலக்கல்வித் திட்டமும் வெகுண்டெழுந்த பெரியாரும்

இது தொடர்பாக புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவரும், மாநில தி.மு.க அமைப்பாளருமான சட்டமன்ற உறுப்பினர் சிவா அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், “புதுச்சேரியிலுள்ள அரசுப் பள்ளிகளை சிபிஎஸ்இ பள்ளிகளாகத் தரம் உயர்த்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம், புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் வைத்த கோரிக்கைக்கு ஒரே நாளில் அனுமதி கொடுத்து மிகப்பெரிய அரசியலை பாஜக செய்திருக்கிறது.

புதுவையில் 400 க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் உள்ளன. புதுவை மாநிலத்தைப் பொறுத்தவரை இங்கு தனி கல்வி வாரியம் கிடையாது என்பதால், தமிழக பாடத்திட்டங்களே பின்பற்றப்பட்டுவருகின்றன. அதேபோல ஏனாம் பிராந்தியத்தில் ஆந்திர மாநிலத்தின் பாடத்திட்டமும், மாஹேவில் கேரள மாநிலத்தின் பாடத்திட்டமும் பின்பற்றப்பட்டுவருகின்றன. இந்த நிலையில், புதுச்சேரியிலுள்ள அரசுப் பள்ளிகள் அனைத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும் என்று, ஒன்றிய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருக்கிறார்.

ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை ஆலோசனை கூட்டம் – புறக்கணித்த தமிழக அரசு

அதுமட்டுமல்லாமல், ஆளுநர் தமிழிசை, புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் கோரிக்கையின் அடிப்படையில்தான் இது நிறைவேற்றப்படவிருக்கிறது என்று கூறியிருப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது. இந்த முடிவு குறித்து புதுவை கல்வி அமைச்சர் சட்டமன்றத்தில் ஏன் விவாதிக்கவில்லை. ஏன் பொதுமக்களை அழைத்து கருத்து கேட்கவில்லை. கடந்த காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சியின்போது தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம்.

ஆளுநர்களுக்குக் கொள்கையைக் கொண்டு வர அரசியலமைப்பு சட்டத்தில் அதிகாரம் இல்லை. பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியில் நாட்டிலேயே சிறந்து விளங்கும் புதுச்சேரியில் இவர்களது சிபிஎஸ்இ பாடத்திட்டம் தேவையற்றது. இதனால் ஆசிரியர்களும் பாதிக்கப்படுவார்கள். வடமாநிலத்தவரைப் பணியில் அமர்த்துவார்கள். ஆசிரியர்களுக்கான `TET’ தேர்வில் தேர்வானது செல்லாது என்பார்கள். CTET மத்திய ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் அரசு வேலை என்பார்கள். அதனால் இந்த விவகாரத்தில் புதுச்சேரி மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டியது அவசியம்.

புதிய கல்விக் கொள்கை: வேண்டும் சிறப்பு தீர்மானம்

புதுச்சேரி அரசின் கல்வித்துறையில் கீழுள்ள பள்ளிகளை சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு மாற்றுவதால் நமது மாநிலத்தின் கல்விக்கான அதிகாரம் முற்றிலுமாகப் பறிக்கப்படும். மேலும், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, ஆசிரியர் பணி நியமனம் போன்ற அனைத்து உரிமைகளும் ஒன்றிய அரசின் கைகளுக்குப் போய்விடும் பெரும் அபாயம் இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மும்மொழி பேசும் புதுச்சேரி பிராந்தியப் பகுதிகளில் தாய்மொழி மற்றும் ஆங்கிலத்தை இருமொழிக் கொள்கைகளுடன் பின்பற்றிவருகிற தனித்தன்மை வாய்ந்த மாநிலம் புதுச்சேரி. ஒற்றைக்குடையின் கீழ் புதுச்சேரி கல்வித்துறையைக் கொண்டுவருவோம் என ஒன்றிய அமைச்சர் கூறுவது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் மூலம் இந்தித் திணிப்பை செய்யும் முயற்சியாகும்.

அத்துடன் நமது மாணவர்களின் தாய்மொழி வளம், நமது மொழி, பண்பாடு, நாகரிகம், வரலாறு என அனைத்தையும் நேரடியாகச் சிதைக்க முயல்கிறார்கள். மேலும் அரசியலுக்காக மட்டுமே தேசியக்கல்விக் கொள்கையை எதிர்க்கட்சிகள் எதிர்க்கிறார்கள் என்று ஒன்றிய அரசின் அமைச்சர் குறிப்பிட்டதை வன்மையாகக் கண்டிக்கிறோம். சமச்சீரான கல்வியை, மாணவர்களின் கற்றல் மற்றும் கற்பித்தலை உறுதிசெய்யும் மாநில பாடத்திட்டத்தை சிதைக்கும் இந்த அறிவிப்பை உடனே திரும்பப் பெற வேண்டும்.

‘இல்லம் தேடி கல்வித் திட்டம்‘ என்பது ஆர்.எஸ்.எஸின் கல்விக் கொள்கை’- கி.வீரமணி

புதுவை முதல்வர் ரங்கசாமி அவர்களின் அனுமதி பெற்றுத்தான் இந்தக் கோரிக்கையும், அறிவிப்பும் வெளிவந்தனவா என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். குலக்கல்வித் திட்டத்தை மறைமுகமாகவும் நேரடியாகவும் திணிக்கப் பார்க்கிறார்கள். இந்தியை சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் கற்றால் மட்டுமே இங்கு வளர்ச்சி என்று பரப்பி திட்டமிட்டே பெற்றோரைக் குழப்புகிறார்கள். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தால் இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ் தெரிந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல் போகும் சூழல் ஏற்படும். வட இந்தியர்களின் ஆதிக்கம் அதிகமாகும்.

உள்ளூர் பூர்வகுடிகள் மாநிலத்தைவிட்டு இடம்பெயரக்கூடிய அபாயம் ஏற்படும். தற்போது நம் பாடத்திட்டத்தில் படித்த பிள்ளைகள் அனைத்துத் துறைகளிலும் சாதனையாளர்களாக இருக்கிறார்கள். சக்கையைக்கொண்டு சாறு பிழிய முற்படுவதே தேசிய கல்விக் கொள்கை, அதனால் புதுச்சேரி மாணவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை. மாநில பாடத்திட்டத்தைவிட சிபிஎஸ்இ பாடத்திட்டம்தான் சிறந்தது என்பதற்கு எந்தவித ஆதாரமும், சான்றும் கிடையாது. அதனால் மாநிலப் பாடத்திட்டத்தை மாற்றும் முடிவை இந்த பாஜக கூட்டணி அரசு கைவிட வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Bharathi Baskar Insults Reservation System | Sundharavalli | Bharathi Baskar latest speech | Quota

புதுச்சேரி: அரசுப் பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளிகளாக மாற்றப்படும் விவகாரத்தில் பாஜக குலக்கல்வியை திணிக்க பார்க்கிறது – புதுச்சேரி திமுக விமர்சனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்