தனியார் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் பலரை, அரசின் முக்கியப் பதவிகளில் ஒப்பந்த முறையில் நியமிக்க இருப்பதாக, மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அமைச்சகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தனியார் துறையைச் சேர்ந்த நிபுணர்களை, அரசின் பல்வேறு துறைகளில், சிக்கலான காலகட்டத்தில் முக்கியமான முடிவுகளை எடுக்கும் பொறுப்புகளில் (இணைச் செயலாளர், இயக்குநர்) நியமிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
திறமையனவர்களுக்கும், இந்த தேசத்தை மேம்படுத்த உத்வேகம் கொண்டுள்ள இந்தியர்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம் என கூறப்பட்டுள்ள அந்த அறிக்கையில், அரசின் முக்கிய துறைகளான, வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம், வருவாய் துறை, நிதி அமைச்சகம், வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் ஆகியவற்றின் இணைச் செயலாளராக, தனியார் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் ஒப்பந்த முறையில் நியமிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘தனியார் தலையீட்டை எதிர்க்கிறோம்’ – விவசாயிகள் சொல்வது சரியா? – அருண் கார்த்திக்
வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம், நிதி சேவைகள் துறை, பொருளாதார விவகாரங்கள் துறை, வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, உயர்கல்வித் துறை, நுகர்வோர் விவகார அமைச்சகம், உணவு மற்றும் பொது விநியோகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், ஜல் சக்தி அமைச்சகம், விமான போக்குவரத்து அமைச்சகம், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் ஆகியவற்றின் இயக்குநர் பொறுப்பிற்கும், தனியார் துறையைச் சேர்ந்த நிபுணர்கள், நியமிக்கப்பட இருப்பதாகவும் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதைப் பற்றிய முழு விவரம், மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில், பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் இந்த பொறுப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், பிப்ரவரி 6 ஆம் தேதி முதல் மார்ச் 22 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொறுப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் அவர்கள் வழங்கிய விவரங்களின் அடிப்படையில் நேர்காணலுக்குப் பட்டியலிடப்படுவார்கள் என கூறியுள்ள அமைச்சகம், அவர்களுக்கு நேரடியாக நியமனம் மூலம் (Lateral entry) பதவிகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
வயநாடு பகுதியில் அதிகரித்து வரும் தனியார் விடுதிகள் – அச்சத்தில் பழங்குடியின மக்கள்
மோடி அரசாங்கத்தின் மிகச் சிறந்த சாதனையாக பார்க்கப்படும் லேட்டரல் எண்ட்ரி முறை, ஆட்சியில் திறமையானவர்களை இணைக்கும் திட்டமாக பார்க்கப்படுவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டே லேட்டரல் எண்ட்ரி முறைப்படி 10 இணைச் செயலாளர்களை தேர்ந்தெடுக்க இருப்பதகாக அறிவிப்பு வெளியானது.
விமான நிலைய தனியார் மயமாக்கலில் அதானி ஆதிக்கம் – மத்திய அரசு உடந்தையா?
மத்திய அரசு தற்போது அறிவித்துள்ள இணைச் செயலாளர் மற்றும் இயக்குநர் பொறுப்பகளில் இதுவரை, இந்திய ஆட்சிப் பணித்துறை (ஐஏஎஸ், ஐபிஎஸ்) அதிகாரிகளே நியமிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.