Aran Sei

அக்னிபத் வீரர்களுக்கு பாஜக அலுவலகத்தில் செக்யூரிட்டி வேலைக்கு முன்னுரிமை – பாஜக தேசியச் செயலாளர் கருத்திற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்

க்னிபத் திட்டத்தில் சேவையாற்றி வெளியேறும் அக்னிவீரர்களுக்கு பாஜக அலுவலக பாதுகாப்புப் பணியில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று பாஜக தேசியச் செயலாளர் கைலாஷ் விஜய்வார்கியா தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கைலாஷ் விஜயவார்கியா, “ஒரு அக்னிவீரர் 4 ஆண்டுகள் சேவையை முடித்து தனது 25 வது வயதில் வெளியே வரும்போது அவர் கையில் ரூ.11 லட்சம் இருக்கும். அவரை அக்னிவீரர் என்று அனைவரும் கொண்டாடுவர். பாஜக அலுவலகப் பாதுகாப்புப் பணிக்கு ஆள் வேண்டும் என்றாலும் கூட நான் அக்னிவீரருக்கு முன்னுரிமை அளிப்பேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அக்னிபத் திட்டம்: போராடும் இளைஞர்கள் போலி தேச பக்தர்களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் – பிரியங்கா காந்தி

அவரது இந்தக் கருத்துக்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முதல் எதிர்ப்புக் குரல் கட்சிக்குள் இருந்தே கிளம்பியது. பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் வருண் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய ராணுவத்தில் பணியாற்றிய வீரர்களை தங்களின் கட்சி அலுவலக பாதுகாப்பிற்கு அழைப்பவர்கள் அந்தக் கருத்தை அவர்களோடு மட்டும் வைத்துக் கொள்ளலாம்” என்று பதிவிட்டிருந்தார்.

அதன் பிறகு உடனடியாக தனது ட்விட்டர் பக்கத்தில் கைலாஷ் விஜய்வார்கியா ஒரு விளக்கம் கொடுத்தார். அதில், “அக்னிபத் திட்டத்தில் இருந்து வெளியே வரும் அக்னிவீரருக்கு தகுந்த பயிற்சி அளித்து அவர் விரும்பும் துறையில் அவரின் திறமை பயன்படுத்தப்படும். இதைத்தான் நான் சொல்ல வந்தேன்” என்று கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, “திறமையான பணியாளர்களை உருவாக்க பாதுகாப்புப் படை ஒரு பயிற்சிக் களமாக இருக்கும். அங்கே பயிற்சி பெற்றவர்கள் வாகன ஓட்டுநர்களாக, எலக்ட்ரீஷியன்களாக, முடி திருத்துபவராக பணியாற்றலாம்” என்று கூறியுள்ளார்.

அக்னிபத் திட்டத்தில் ஆர்எஸ்எஸின் மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் உள்ளதா? – ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கேள்வி

இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி, “அக்னிவீரர்கள் வாகன ஓட்டுநர்களாகவும், சலவைத் தொழிலாளியாகவும் பயிற்றுவிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் கிஷன்ரெட்டி கூறியுள்ளார்.

“ராணுவத்தில் பணியாற்றுவது என்பது மாண்புமிகு சேவை. ராணுவத்தில் இணைவோர் உயிர்த் தியாகம் செய்யத் தயாராக வருகின்றனர். வாகன ஓட்டுநர்களாக இருக்க விரும்புவோர் எதற்காக 4 ஆண்டுகள் ராணுவத்தில் சேவை செய்ய வேண்டும். அமைச்சரின் கருத்து அக்னி வீரர்களை பாஜக வெறும் செக்யூரிட்டியாகப் பார்க்கிறது என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது” என்று அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார்.

டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “நாட்டின் இளைஞர்கள் மற்றும் ராணுவ வீரர்களை இப்படி அவமதிக்காதீர்கள். நமது நாட்டு இளைஞர்கள் உடல் தேர்வில் தேர்ச்சி பெற இரவு பகலாக கடுமையாக உழைக்கிறார்கள். ராணுவத்தில் சேர்ந்து வாழ்நாள் முழுவதும் நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள், பாஜக அலுவலகத்திற்கு வெளியே காவலராக இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல” என்று தெரிவித்துள்ளார்.

Source : telegraphindia

பற்ற வைத்த வட இந்தியர்கள் அஞ்சி நடுங்கும் பாஜக | Agnipath

அக்னிபத் வீரர்களுக்கு பாஜக அலுவலகத்தில் செக்யூரிட்டி வேலைக்கு முன்னுரிமை – பாஜக தேசியச் செயலாளர் கருத்திற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்