அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராடும் இளைஞர்களை சமாதானப்படுத்த 4 வருடங்கள் கழித்து இத்திட்டத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்படுபவர்களுக்கு அரசுப் பணிகளில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடஒதுக்கீட்டு பணியிடங்கள் இன்னமும் நிரப்பப்படவில்லை என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின் முன்னாள் ராணுவ வீரர் நலத் துறையின் அண்மை தரவுகளின்படி, முன்னாள் ராணுவ வீரர்கள் ஒன்றிய அரசுத் துறைகளில் குரூப் சி பதவிகளில் 10 விழுக்காடு மற்றும் குரூப் டி பதவிகளில் 20 விழுக்காடு இருக்க வேண்டும். ஆனால் முறையே 1.29% மற்றும் 2.66% மட்டுமே முன்னாள் ராணுவ வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
டெல்லி : அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர்கள் சத்தியாகிரகப் போராட்டம்
ஒன்றிய அரசாங்கத்தில் உள்ள சேவைப் பதவிகள் ஏ, பி, சி மற்றும் டி என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் ‘ஏ’ பதவிகள் அமைச்சகங்களில் நிர்வாகம் மற்றும் மேலாண்மை சார்ந்தவை. குரூப் ‘பி’ பதவிகள் நடுத்தர நிர்வாக ஊழியர்களைக் கொண்டுள்ளன. குரூப் ‘சி’ பணியிடங்கள் எழுத்தர் பணியையும், குரூப் ‘டி’ ஊழியர்கள் பராமரிப்பு மற்றும் தொழிலாளர் பணியாகவும் உள்ளன என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
மத்திய ஆயுத காவல்துறை படைகளிலும், உதவி ராணுவ தளபதி நிலை வரை நேரடி ஆட்சேர்ப்பில் முன்னாள் படைவீரர்களுக்கு ஏற்கனவே 10 விழுக்காடு இட ஒதுக்கீடு உள்ளது. ஆனால் இந்தியன் எக்ஸ்பிரஸின் கூற்றுப்படி, முன்னாள் ராணுவ வீரர்கள் மத்திய ஆயுத காவல்துறை படைகளில் உள்ள குரூப் சி பிரிவில் 0.47 விழுக்காடு மட்டுமே உள்ளனர். குரூப் பி பிரிவில் 0.87 விழுக்காடு மற்றும் குரூப் ஏ பிரிவில் 2.20 விழுக்காடு மட்டுமே உள்ளனர் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களிலும், முன்னாள் ராணுவ வீரர்களுக்கான இட ஒதுக்கீடு பூர்த்தி செய்யப்படவில்லை. குரூப் சி பதவிகளில் 14.5 விழுக்காடு மற்றும் குரூப் டி பதவிகளில் 24.5 விழுக்காடு இட ஒதுக்கீடு என நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும், தரவு கிடைத்த 170 பொதுத்துறை நிறுவனங்களில் 94 நிறுவனங்களில் குரூப் சி பதவிகளில் முன்னாள் ராணுவ வீரர்கள் 1.15 விழுக்காடும் குரூப் டி பதவிகளில் 0.3 விழுக்காடு மட்டுமே உள்ளனர் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
பொதுத்துறை வங்கிகளும் முன்னாள் ராணுவத்தினருக்கான இடஒதுக்கீட்டை பூர்த்தி செய்யவில்லை. குரூப் சி பிரிவில் நேரடி ஆட்சேர்ப்புக்கு முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 14.5 விழுக்காடு இட ஒதுக்கீடும், குரூப் டி பிரிவில் 24.5 விழுக்காடு இட ஒதுக்கீடும் பொதுத்துறை வங்கிகளிடம் உள்ளது. ஆனால் குரூப் சி பிரிவில் 9.10 விழுக்காடும், குரூப் டி பிரிவில் 21.34 விழுக்காடும் முன்னாள் ராணுவ வீரர்கள் பணியாற்றுகின்றனர்.
Source : The Wire
Agnipath திட்டம் ராணுவத்தையே முடக்கிடும் EX Indian Army K Malaiappan Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.