Aran Sei

உன்னாவ் சிறுமிகள் மரணம் – குடும்பத்தினர் மிரட்டப்படுகிறார்களா? – மறு பிரேதபரிசோதனை கோரும் சந்திரசேகர் ஆசாத்

உத்திரபிரதேசத்தின் உன்னாவ் நகரில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமிகள் உயிரிழப்புகளுக்கான காரணத்தை, பிரேத பரிசோதனை அறிக்கைமூலம் அறிய முடியவில்லை என உத்திரபிரதேசம் காவல்துறை தலைமை இயக்குனர் எச்.சி.அஸ்வாதி தெரிவித்ததாக தி இந்து  செய்தி வெளியிட்டுள்ளது.

கிழக்கு உத்திரபிரதேசத்தின், உன்னாவ் மாவட்டத்தில், இரண்டு தலித் சிறுமிகள் சடலமாகவும், ஒரு சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையிலும், உத்திரபிரதேச காவல்துறையினரால் பிப்ரவரி  17 ஆம் தேதி மீட்கப்பட்டனர்.

கால்நடைகளுக்குத் தீவனம் சேகரிக்க சென்ற சிறுமிகள் வீட்டிற்கு திரும்பாத நிலையில், கிராமவாசிகள் தேடியபோது, வயல்வெளியில் சிறுமிகளை கண்டனர் என, உள்ளுர் வட்டார செய்திகள் தெரிவிப்பதாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசாரணை தகவல்களை வெளியிட டெல்லி காவல்துறைக்கு தடை – தீஷா ரவி தொடந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில்  இறப்பிற்கான காரணத்தை அறிய முடியவில்லை என்றும், ரசாயன பரிசோதனைக்காக உடல் உறுப்புகள் பாதுகாக்கப்படுகிறது என்றும் கூறியுள்ள உத்திரபிரதேச காவல்துறை தலைமை இயக்குனர் எச்.சி.அஸ்வாதி, ”பிரேத பரிசோதனையில் சிறுமிகளின் உடல்களில் எந்தக் காயங்களும் இருந்தததற்கான தடயம் இல்லை” எனத் தெரிவித்துள்ளதாக தி இந்து கூறியுள்ளது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட சிறுமி, உயர் சிகிச்சைக்காகக் கான்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ள எச்.சி.அஸ்வாதி, “மருத்துவ குறிப்புகளின்படி, விஷம் கொடுத்ததால் நிகழ்ந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாகவும், சிறுமியின் உடல்நிலை மோசமாக இருந்தாலும், சீராக இருக்கிறது” எனக் கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கை விசாரிக்க ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், அஸ்வானி தெரிவித்துள்ளார்.

அமைதியான முறையில் நடைபெற்ற விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டம் – நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆதரவு

சிறுமிகளின்  குடும்ப உறுப்பினர்கள் அளித்த புகாரின் பெயரில், இந்திய தண்டனை சட்டம் 301 மற்றும் 201ன் கீழ் வழக்கு பதியப்பட்டிருக்கிறது என்றும், ”உடல்கள் அவர்களது குடும்பத்திற்கு சொந்தமான கடுகு வயலில் இருந்து மீட்கப்பட்டதாக, பூர்வா காவல்நிலைய  வட்ட அலுவலர் ரமேஷ் சந்திர பிரயலாங்கர், தி இந்து -விடம் தெரிவித்துள்ளார்.

சிறுமியின் குடும்பத்தினரை ஊடகங்களிடம் பேசவிடாமல், காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ள ரமேஷ் சந்திர பிரயலாங்கர், ”அது போன்ற நிகழ்வு எதுவும் நடைபெறவில்லை. என்ன நடந்தது என்ற விசாரணை தொடர்பாக  அவர்களை அழைத்தோம். இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள காவல்துறை பாதுகாப்புடன் அவர்களை வீட்டுற்கு அனுப்பி வைத்தோம்” என்றும், “அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் இருக்கும் குடும்பத்தினர் இறுதி சடங்குகளைப் பிப்ரவரி 20 ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளனர்” என்றும் கூறியதாக தி இந்து தெரிவித்துள்ளது.

சிறுமியை அழைத்துவந்தபோது ஆபத்தான நிலையில் இருந்தாகத் தெரிவித்த உன்னாவ் மாவட்ட மருத்துவமனையின் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர், பாசந்த பட், ”மருத்துவ ரீதியாக, இது ஆர்கனோ பாஸ்பரஸ் விஷம் கொடுக்கப்பட்ட நிகழ்வுபோலத் தோன்றுகிறது. இந்த ரசாயனம் பூச்சிக்கொல்லிகளில் பயன்படுத்தப்படுகிறது. சிறுமி வாயில் நுரையுடன், மூச்சுவிடச் சிரம்பட்டுக்கொண்டிருந்தார். நாங்கள் அவரது நுரையீரலில் குழாய் விட்டு விஷத்தை வெளியேற்றினோம்” எனத் தெரிவித்தாக அந்த செய்தியில் குறிப்படப்பட்டுள்ளது.

”கருத்துரிமையை மறுக்க, இது இந்தியா அல்ல”: பாகிஸ்தான் நீதிபதி கருத்து; நாம் வெட்கித் தலைகுனிய வேண்டும் – ப.சிதம்பரம்

சிறுமிகளின் கைகள் கட்டப்பட்டிருக்கும் நிலையில் எப்படி அவர்கள் விஷத்தைக் குடித்து இருக்க முடியும்? என்றும் இது கொலையாக இருக்குமோ என்ற சந்தேகம் இருப்பதாகவும், சிறுமியின் சகோரதர் பேசிய காணொளியும், சிறுமிகளின் கைகள் கட்டப்படவில்லை என்றும், சிறுமிகள் மரணத்தில் சந்தேகம் இல்லை என்றும் சிறுமிகளின் தாயார் பேசிய காணொளியும் வெளியாகி இருப்பதாக தி இந்து தெரிவித்துள்ளது.

ஆபத்தான நிலையில் இருக்கும் சிறுமியைச் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்றும், சரிபாதி பகுஜன் மருத்துவர்கள் கொண்ட மருத்துவர்கள் குழு மூலம், இறந்த  சிறுமிகளின் உடல்களை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டரில், ”முன்பு ஹத்ராஸில் ஒரு மகள், பிறகு பதாவுனில் ஒரு தாய், தற்போது உன்னாவில் சகோதரிகள் – பாஜக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை” என இந்தியில் பதிவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு செலவில் சிறந்த சிகிச்சை வழங்குவதை உறுதி செய்யுமாறும், உத்திரபிரதேச காவல்துறையின் தலைமை இயக்குனருக்கு அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்திரவிட்டிருப்பதாக, தி இந்து கூறியுள்ளது.

உன்னாவ் சிறுமிகள் மரணம் – குடும்பத்தினர் மிரட்டப்படுகிறார்களா? – மறு பிரேதபரிசோதனை கோரும் சந்திரசேகர் ஆசாத்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்