முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் அரசாணையை ரத்து செய்யக் கோரி மருத்துவர்கள் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழக அரசு அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ படிப்புக்கான (எம்டி, எம்எஸ், எம்டிஎஸ்) இடங்களில் 50 சதவீத இடங்களை அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கி 7.11.2020-ல் அரசாணை பிறப்பித்தது. மேலும், அந்த அரசாணையில் மீதமுள்ள 50 சதவீத இடங்களை மதிப்பெண் அடிப்படையில் அரசு மருத்துவர்கள், அரசு பணியில் இல்லாத மருத்துவர்களை கொண்டு நிரப்ப வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி மருத்துவர்கள் ஏ.பாக்கியராஜ், பி.ஆர்.புதியசாமி, எம்.ஆனந்த், பி.சி.ஸ்ரீநந்தினி, ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். அதில், இந்த அரசாணையால் அரசு மருத்துவர்களாக இல்லாத மருத்துவர்கள் முதுநிலை மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலை ஏற்படும். எனவே அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ”இந்த அரசாணைக்கு எதிராக ஏற்கெனவே அமர்வில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கிலும் மனுதாரர்கள் இப்போது தெரிவித்துள்ள கோரிக்கையை தெரிவித்தனர். அவர்களின் கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. அரசு பணியிலுள்ள மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவ சேர்க்கையில் தனி ஒதுக்கீடு வழங்க அரசுக்கு அதிகாரம் உண்டு என உச்ச நீதிமன்றமும் கூறியுள்ளது. இந்த அரசாணை அடிப்படையில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை மட்டுமே நடைபெற்றுள்ளது. இதனால் அரசாணையை ரத்து செய்ய முடியாது. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன” தெரிவித்துள்ளார்.
Tamilnadu CM MK Stalin Inaugrates Pudhumai Pen Thittam | Women Welfare Scheme | Freebies | Dravidian
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.