சமூக நல்லிணக்கத்திற்கு இடையூறு விளைவிக்கும் கருத்தை தெரிவித்ததாக ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் விக்ரமன் மீது டெல்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிந்துள்ளது. இதற்குப் பதிலளித்துள்ள விக்ரமன், பாஜக தொண்டர்களை சமாதானப்படுத்த டெல்லி காவல்துறை முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாஜகவைச் சேர்ந்த நுபூர் ஷர்மா, நவீன் ஜிண்டால், பத்திரிக்கையாளர் சபா நக்வி, மௌலானா முப்தி நதீம், அப்துர் ரஹ்மான், குல்சார் அன்சாரி, அனில் குமார் மீனா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் விக்ரமன் மற்றும் ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து அரண்செய்யிடம் பேசிய விக்ரமன், ஜனநாயக குரல்களை ஒடுக்குவதற்காக செய்யப்படும் பழிவாங்கும் நடவடிக்கை என்றார்.
மத பயங்கரவாதிகள் இஸ்லாமியர்களுக்கு எதிராக இனப்படுகொலை பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாகத்தான் நுபுர் ஷர்மா, நவீன் ஜிண்டால் உள்ளிட்டோர் பேசி இருக்கிறார். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்; கைது செய்ய வேண்டும் என்று இந்தியா முழுக்க கோரிக்கை எழுந்துள்ளது. அவர்களை பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மேற்கு வங்கத்தில் கடுமையான போராட்டம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் பிரச்சினையை முடிக்க வேண்டும் என்கிற காரணத்திற்கான முகமது நபியை இழிவுபடுத்திய குற்றச்சாட்டில் நுபுர் ஷர்மா, நவீன் ஜிண்டால் மீது முதல் தகவல் அறிக்கையை டெல்லி சிறப்பு காவல் துறையினர் பதிந்திருக்கிறார்கள்.
ஒவைசி, நான் உட்பட பல ஜனநாயக குரல்களை ஒடுக்கும் விதமாக இரண்டாவது எஃப்ஐஆரை டெல்லி சிறப்பு காவல்துறை பதிந்துள்ளது. ஜனநாயக சக்திகள் மீது போடப்பட்ட எஃப்ஐஆருக்கு காரணம் என்னவென்றால், நுபுர் ஷர்மா, நவீன் ஜிண்டால் ஆகிய இருவரை கட்சியிலிருந்து நீக்கியதால் பாஜக தொண்டர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். இவர்கள் இருவர் மீது மட்டும் வழக்கு பதிந்தால் இன்னும் அதிருப்தி ஏற்படும் என்கிற காரணத்தால் ஜனநாயக சக்திகள் மீதும் எஃப்ஐஆர் போட்டு பாஜக தொண்டர்களை சரிசெய்ய டெல்லி காவல்துறை முயற்சிக்கிறது.
நாங்கள் சமத்துவத்திற்காகவும் சமாதானத்திற்காகவும் பேசி வருகிறோம். இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்ய அழைப்பு விடுத்த யதி நரசிங்கானந்த்தோடு எங்களையும் எஃப்ஐஆரில் இணைத்திருப்பது வெறுப்பு பிரச்சாரம் என்கிற குற்றச்சாட்டை மலினப்படுத்தி நீர்த்துப் போகும் வேலையை காவல்துறையினர் செய்கிறார்கள் எங்கள் மீது சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. நானும் தொடர்ந்து முயற்சி செய்கிறேன் எஃப்ஐஆரின் நகல் இன்னும் வழங்கப் படவில்லை. தெளிவில்லாத எஃப்ஐஆராக இருக்கிறது. அமித்ஷாவுடைய ஏவல் துறையாக சங் பரிவாரங்களை திருப்திப்படுத்துவதற்காக போடப்பட்ட எஃப்ஐஆர் இது. இதை நான் சட்டப்படி சந்திப்பேன் என்று அரண்செய்யிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் விக்ரமன் தெரிவித்தார்.
வெளியான மிரட்டல் கடிதம் வெளிவராத பகீர் உண்மைகள் Vikraman Interview | Nupur Sharma
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.