பொதிகைத் தொலைக்காட்சியில் தினமும் 15 நிமிடங்களை சமஸ்கிருதச் செய்தி அறிக்கைக்கு ஒதுக்கக் கோரிய ஆணையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
பிரசார் பாரதியின் கீழ் இயங்கும் பொதிகை உள்ளிட்ட அனைத்துத் தொலைக்காட்சிகளும் தினமும் 15 நிமிடங்களை சமஸ்கிருதச் செய்தி அறிக்கைக்கு ஒதுக்கவேண்டும் எனவும், வாராவாரம் சனிக்கிழமை 15 நிமிடங்களை வாராந்திர சமஸ்கிருதச் செய்தித்தொகுப்பிற்கு ஒதுக்கவேண்டும் எனவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (29/12/20) மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
“மனுநீதியே ஆட்சி செய்கிறது” – ஓய்வு பெற்ற நீதிபதி பி.பி.சாவந்த்
இதையடுத்து தமிழகத்தில் சமஸ்கிருதத்தை, இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாகக் கூறி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.
தூர்தர்ஷனின் பொதிகையில் சமஸ்கிருத செய்தித் தொகுப்பு எதற்கு? உலக வழக்கழிந்த மொழியை மத்திய அரசு திணிப்பது ஏன்?
இது பண்பாட்டு படையெடுப்பு; ஒருமைப்பாட்டைப் பிளக்கும் கோடரி!
உத்தரவைத் திரும்பப் பெறாவிட்டால் ஆட்சியாளர்களின் ஆணவமும் – அதிகார மமதையும் உடையும்!#StopSanskritImposition pic.twitter.com/nkIPHmj55n
— M.K.Stalin (@mkstalin) November 29, 2020
இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் கண்ணன், இந்த விவகாரம் குறித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக முறையீடு செய்துள்ளார்.
“தமிழ்மொழி நிகழ்ச்சிகளுக்காகத் தொடங்கப்பட்ட பொதிகைத் தொலைக்காட்சியில் இதுவரை வேறுமொழிச் செய்திகள் எதுவும் இடம்பெற்றிராத நிலையில் தமிழர்களின் பண்பாட்டு வாழ்விற்கு எவ்விதத்திலும் தொடர்பில்லாத சமஸ்கிருதச் செய்தியறிக்கை என்பதை ஏற்கமுடியாது. ஆகவே, சமஸ்கிருதச் செய்தி அறிக்கை, சமஸ்கிருத வாராந்திரச் செய்தித்தொகுப்பு குறித்த ஆணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என வழக்கறிஞர் கண்ணன் முறையிட்டுள்ளார்.
இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த அவருக்கு, இதை மனுவாகத் தாக்கல் செய்தால் விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.