பட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் வன்னியர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்புகளில் பிரதிநித்துவம் கோரிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், இன்று காலை சென்னையின் தெற்குப் புறநகரில் உள்ள ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக முடங்கியது.
1987 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 விழுக்காடும், மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 2 விழுக்காடும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தித் தொடர் சாலை மறியல் போராட்டம் மருத்துவர் இராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த இட ஒதுக்கீடு போராட்டக்காரர்களை அடக்குவதற்குத் தமிழகக் காவல் துறையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 21 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் வன்னிய சமூகத்தினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி சென்னையில் இன்று போராட்டம் நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார். போராட்டத்தில் பங்கேற்பதற்காகப் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்குள் பாமகவினர் நுழைய முயன்றனர். பெருங்களத்தூர் அருகே அவர்களுடைய வாகனங்களை போலீசார் தடுத்துநிறுத்தினர்
போராட்டத்தில் பங்கேற்க போலீசார் அனுமதி மறுத்ததால் ஜி.எஸ்.டி சாலையில் பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவனந்தபுரத்தில் இருந்து வரும், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் வண்டலூருக்கும் தம்பரத்திற்கும் இடையில் போராட்டத்தின் காரணமாக 10 நிமிடங்களுக்கும் மேலாக நிறுத்தப்பட்டது.
இதேபோன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பாமகவினர் சென்னையை நோக்கிப் போராட்டதிற்கு வந்தனர். அவர்களை அந்தந்த மாவட்ட எல்லைகளில் போலீசார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர். பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் ரயிலை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினரை அழைத்துச் சென்று சமூக நலக்கூடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மூத்த காவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர்அணித் தலைவர் அன்புமனி ராமதாஸ் தலைமையில், அரசு வேலைகள் மற்றும் உயர் கல்வியில் வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசியதாகத் தெற்கு ரயில்வேயின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ரயிலில் வந்த பயணிகளுக்கும் ரயிலுக்கும் எவ்விதமான சேதாரம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ரயில்வே ஓட்டுநர் வண்டியை நிறுத்தியதாக அவர் கூறியுள்ளார்.
காவல்துறையினர், போராட்டக்காரர்களை ரயில்வே பாதையில் இருந்து அகற்றிய பின்னர் ரயில், சென்னை எழும்பூர் நோக்கிச் சென்றது.
செங்கல்பட்டு மாவட்டக் காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர், வண்டலூர் மற்றும் பெருங்களத்தூர் இடையே சாலைப் போக்குவரத்து முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், தனியார் வாகனங்களில் வருபவர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா கால நடைமுறைகள் அமலில் இருப்பதால் போலீசார், பாமகவின் இந்தப் போராட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.