பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் மாதத் தொடக்கத்தில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டுவார் எனும் தகவல் வெளியாகியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
புதிய கட்டடம் தற்போது உள்ள நாடாளுமன்றக் கட்டடத்திற்கு அருகில் கட்டப்படவுள்ளது. கட்டுமானப் பணிகள் 21 மாதங்கள் நடைபெறும் என்று எதிர்பாக்கப்படுகிறது.
முக்கோண வடிவத்திலான புதிய நாடாளுமன்றக் கட்டடத்துடன், ஒரு பொது மத்திய செயலகத்தைக் கட்டவும், குடியரசு தலைவர் மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான 3 கிலோ மீட்டர் நீள ராஜபாதையை மேம்படுத்தவும் ‘மத்திய அதிகார வளாக மறுமேம்பாட்டுத் திட்டத்தில்’ முடிவு செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் 10-ம் தேதி, புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்படும் எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பிரதமரின் பணிசூழலைப் பொறுத்தே இது இறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
அனைத்து அமைச்சர்களுக்கும் தனித்தனி அலுவலகங்கள் கட்டப்படவுள்ளன. நவீன டிஜிட்டல் வசதிகள் செய்யப்பட்டு அவை காகித ஆவணங்களற்ற அலுவலகங்களாகச் செயல்படவுள்ளன.
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில், இந்தியாவின் ஜனநாயகப் பாரம்பரியப் பெருமையை எடுத்துக்காட்டும் வகையில் ஒரு மாபெரும் அரங்கு, உறுப்பினர்களுக்கான வளாகம், நூலகம், பல்வேறு குழுக்களுக்கான அறைகள், உணவருந்தும் இடம் மற்றும் போதுமான வாகன நிறுத்தப் பகுதி ஆகியவை அமைக்கப்படவுள்ளன.
நாடாளுமன்ற விஸ்டா கட்டிட முறைகேடு – குற்றச்சாட்டை வாபஸ் பெறுவதாக எஸ்பி குழுமம் அறிவிப்பு
இந்த நாடாளுமன்றக் கட்டுமானப் பணியை டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனம், ரூ.861.90 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள உள்ளது.
முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் நாடாளுமன்றக் கட்டுமானப் பணியை மேற்கொள்வதற்காக விடப்பட்ட டெண்டரில் பங்கேற் எஸ்.பி குழுமம், மத்தியப் பொதுப்பணித்துறைக்கு இரண்டு கடிதங்களை அனுப்பி இருந்தது. அதில், “டிசிஇ மற்றும் டிபிஎல் (டாட குழும நிறுவனங்கள்) நிறுவனங்கள் இரண்டுமே ஏல நடைமுறையில் பங்கேற்பது மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விதிகளுக்கு எதிரானது” என்று குற்றம் சாட்டியிருந்தது.
மேலும், ஏலத்தில் டிபிஎல் நிறுவனம் பங்கேற்பதற்கு வழி செய்யும் வகையில் ஏலம் எடுப்பதற்கான தகுதிகள் மற்றும் அளவுகோல்கள் மாற்றப்பட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தது. ஆனால், அடுத்த சில வாரங்களில் திடீரென்று அந்தக் கடிதங்களைத் திரும்பப் பெறுவதாக எஸ்.பி குழுமம் அறிவித்தது.
தற்போதுள்ள நாடாளுமன்றக் கட்டடம், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், எட்வின் லுடியன்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டது. அவர்கள், புது டெல்லியை வடிவமைக்கும் பணியிலும் ஈடுபட்டவர்கள்.
1921-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 12-ம் தேதி, தற்போதுள்ள நாடாளுமன்றக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. கட்டுமானத்திற்கு 6 ஆண்டுக்காலம் ஆனது. அதற்கு ரூ.83 லட்சம் செலவானது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.