அண்மை காலங்களில் விலை ஏற்றப்பட்டதன் விளைவாக, பெட்ரோல், டீசல் விலை நாட்டில் புதிய உச்சத்தை வியாழக்கிழமை (பிப்ரவரி 5) எட்டியுள்ளது என தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.
விலையேற்றத்தின் சுமை நுகர்வோரைப் பாதிக்காமல் இருக்க அரசாங்கங்கள் தங்கள் வரிகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என எரிபொருள் சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்திருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசுக்குச் சொந்தமான எரிபொருள் சில்லறை விற்பனையாளர்களின் விலை அறிவிப்பின்படி, ஒரு வார இடைவெளிக்குப் பிறகு பெட்ரோல், டீசலின் விலை லிட்டருக்கு 35 பைசா உயர்த்தப்பட்டிருப்பதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வின் மூலம் புதிய உச்சமாக டெல்லி மற்றும் மும்பையில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ. 86.65 மற்றும் ரூ. 93.20 ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு ரூ 76.83 மற்றும் 83.67 ஆகவும் இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மூன்றாவது எரிபொருள் சில்லறை விற்பனை நிறுவனமான இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட் தலைவர் மகேஷ் குமார் சுரானா, சவுதி அரேபியா தனது உற்பத்தியைக் குறைத்ததை அடுத்து, உற்பத்தி மற்றும் தேவைக்கு இடையே இருக்கும் சமமற்ற நிலை காரணமாக, கடந்த சில தினங்களில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை பீப்பாயின் விலை 59 அமெரிக்க டாலருக்கு உயர்ந்ததே, இந்த விலை ஏற்றத்திற்கு காரணம் என தெரிவித்தாக தி வயர் தெரிவித்துள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் வரிகள், விற்பனையாளர் கமிஷன் ஆகியவற்றை உற்பத்தி விலையுடன் சேர்த்தே பெட்ரோல், டீசலின் சில்லரை விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதில் 25-30% வரை மட்டுமே விற்பனையாளர்கள் கமிஷன் என்றும் மற்றவை அனைத்தும் மத்திய, மாநில அரசுகளின் வரி தான் என்றும் மகேஷ் கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலை வேறுபாட்டிற்கு எங்களால் ஒன்றும் செய்ய முடியாது, வரியை அரசாங்கம் குறைத்தால் மட்டுமே சாத்தியம் என அவர் தெரிவித்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிப்ரவரி 3 ஆம் தேதி, மாநிலங்களைவையில் எழுத்துபூர்வமாகப் பதிலளித்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பெட்ரோல் மீதான மத்திய அரசின் கலால் வரி ரூ 32.98 ஆகவும், மற்றும் டெல்லி அரசின் மதிப்பு கூட்டு வரி ரூ 19.55 ஆகவும் இருக்கிறது என்றும், டீசல் மீதான கலால் வரி ரூ 31.83 ஆகவும், மதிப்பு கூட்டு வரி ரூ 10.99 ஆக இருப்பதாகவும், இதைத் தவிர்த்து விற்பனையாளர் கமிஷன் குறைந்தபட்சம் பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ. 2.6 ஆகவும் டீசலுக்கு லிட்ட்ருக்கு ரூ. 2 ஆகவும் இருக்கிறது என்று தெரிவித்திருப்பதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் தேவை மற்றும் உற்பத்திக்கு இடையில் இருக்கும் சமமற்றதன்மையே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்குக் காரணம் என்றும், உற்பத்தி சீரானால் விலை குறைய வாய்ப்பிருக்கிறது என இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட் தலைவர் மகேஷ் குமார் சுரானா தெரிவித்ததாக தி வயர் கூறியுள்ளது
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.