மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வை ஒத்தி வைக்க வேண்டுமென இளநிலை மருத்துவர்கள் கோரியதை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வை ஒத்தி வைப்பது பல குழப்பங்களை ஏற்படுத்தும் எனத் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கு சேர்வதற்கான நீட் தேர்வு மே 21 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்வை ஒத்திவைக்கும்படி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் (இளநிலை மருத்துவர்கள்) தரப்பில் இருந்து தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
கலந்தாய்வு நடந்துகொண்டிருப்பதால் முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்கும்படி இளநிலை மருத்துவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் 2021ம் ஆண்டு மருத்துவ மேற்படிப்புக்கான அனைத்து கலந்தாய்வும், 2022ம் ஆண்டு முதுநிலை நீட் தேர்வும் ஒரே நேரத்தில் நடப்பதால் குழப்பம் ஏற்படும். நடுத்தர மதிப்பெண் பெற்ற மாணவர்களை பாதிக்கும். எனவே மே 21 ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்கும்படி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று விசாரணைத்தது.
கடந்த ஆண்டு நீட் தேர்வு நான்கு மாதங்கள் தாமதமாக நடத்தப்பட்டதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றால் சிக்கலாகியுள்ள மருத்துவ மாணவர் சேர்க்கையை மீட்டெடுக்க முயன்று வரும் நிலையில், தேர்வை மீண்டும் ஒத்தி வைப்பது மருத்துவர்களின் எண்ணிக்கை குறைய வழிவகுக்கும் எனவும் ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ”நீட் தேர்வை ஒத்திவைப்பதால் குழப்பம் மற்றும் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கும். தேர்வுக்கு பதிவு செய்த மாணவர்கள் பெரும்பாலானோரை பாதிக்கும். இவ்விவகாரத்தில் இரண்டு வகை மாணவர்கள் உள்ளனர். ஒரு தரப்பினர் தேர்வை ஒத்தி வைக்க விரும்புகிறார்கள். மற்றொன்று 2 லட்சத்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள். அவர்கள் தேர்வுக்கு தயாரான பிறகு ஒத்தி வைத்தால் பாதிக்கப்படுவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், தொற்று நோயால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து நாடு திரும்பி வரும் போது, நீதிமன்றம் வகுத்துள்ள நேர அட்டவணையை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். மேலும், தேர்வை தள்ளி வைத்தால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுவதுடன், மருத்துவ சேவைகளும் பாதிக்கப்படும். அந்த சிரமத்தை வழங்க நாங்கள் விரும்பவில்லை. எனவே தேர்வை ஒத்தி வைக்க கோரிய மனுக்களை தள்ளுபடி செய்கிறோம்” என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
source: newindianexpress
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.