பேரறிவாளனுக்கு 30ஆண்டுகளாக இழைக்கப்பட்ட அநீதி வீழ்த்தப்பட்டது. ஒரு நிரபராதிக்கு எதிரான இந்த அநீதிக்கு காரணமானவர்களுக்குச் சட்டம் என்ன தண்டனை வழங்கப் போகிறது என்று மக்களவை உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தால் பேரறிவாளன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், 142வது சட்டப்பிரிவின் கீழ் நிரந்தரமாக விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.
மே 1991-ல் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்
இதில், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையும் எஞ்சிய 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. பின்னர், 2014 ஆண்டில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூவருக்கும் தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.
ராஜிவ் வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டவர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருதால், அவர்களை விடுவிக்கக் கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2018 ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்திய அரசியலமைப்பு சட்டம் 161வது பிரிவின் கீழ் தமிழ்நாடு ஆளுநருக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்யக் கோரி தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், முடிவெடுக்குமாறு ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி பேரறிவாளன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிமன்றம் பரோலில் இருந்த பேரறிவாளனுக்கு கடந்த மார்ச் 9 தேதி பிணை வழங்கி உத்தரவிட்டிருந்தது
இந்நிலையில், மனு மீதான இறுதி தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் அடங்கிய அமர்வு, இந்திய அரசியலமைப்பு பிரிவு 142 கீழ் பேரறிவாளனை நிரந்தரமாக விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசிய மக்களவை உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன், பேரறிவாளனுக்கு 30ஆண்டுகளாக இழைக்கப்பட்ட அநீதி வீழ்த்தப்பட்டது. ஒரு நிரபராதிக்கு எதிரான இந்த அநீதிக்கு காரணமானவர்களுக்குச் சட்டம் என்ன தண்டனை வழங்கப் போகிறது? இத்தகைய கேள்விக்கு இங்கே விடை இல்லை. பாதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனின் மறுவாழ்வுக்கு ஒன்றியஅரசு என்னசெய்யப் போகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், மக்கள் மன்றத்தைச் சார்ந்த தங்கை செங்கொடியின் ஈகத்தை தற்போது நினைவுகூர்ந்திட வேண்டியது நாம் அவருக்குச் செலுத்தும் நன்றிக் கடனாகும். பேரறிவாளன் உள்ளிட்ட மூவரையும் மரணத் தண்டனையிலிருந்து காத்திட அவர் தன்னைத்தானே மாய்த்துக் கொண்டார். அவருக்கு எமது செம்மாந்த நன்றிகலந்த வீரவணக்கம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் விடுதலை தமிழர்களுக்கு திருவிழா Pasumpon Pandian
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.