பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் உளவு பார்த்ததாக எழுந்த புகார் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ரவீந்திரன் கண்காணிப்பில் ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட தொழில்நுட்ப நிபுணர் குழு இன்று உச்ச நீதிமன்றத்தில் தனது அறிக்கையை தாக்கல் செய்தது.
தங்களது விசாரணைக்கு ஒன்றிய அரசு ஒத்துழைக்கவில்லை என்று தொழில்நுட்ப நிபுணர் குழு தெரிவித்தது தொடர்பாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனம் தயாரித்த பெகசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தி, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அரசுகள், முக்கிய பிரமுகர்களின் செல்போன்களை உளவு பார்த்ததாக சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
குறிப்பாக, இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள், ஒன்றிய அரசின் அமைச்சர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட முக்கியப் பிரமுகர்களின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியானது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனையடுத்து ‘பெகாசஸ்’ மென்பொருள் மூலம் உளவு பார்த்ததாக எழுந்த புகார் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி கண்காணிப்பில் ஆய்வு செய்ய தொழில்நுட்ப நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு தனது அறிக்கையில் விசாரணைக்கு ஒன்றிய அரசு ஒத்துழைக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.
“அந்தக் குழுவின் விசாரணை அறிக்கை மூன்று பாகங்களாக உள்ளன. சில பாகங்கள் மிகவும் ரகசியமானவை. அதில் சில தனிநபர் தகவலும் இடம்பெற்றிருக்கலாம். ஆகையால், பாதுகாப்பு காரணங்களுக்காக தொழில்நுட்ப நிபுணர் குழுவின் அறிக்கையின் சில பகுதிகளை வெளியிட முடியாது. உளவு மென்பொருள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 29 தொலைப்பேசிகளில் 5-ல் மட்டுமே உளவு மென்பொருள் இருந்தது. ஆனால், அவையும் பெகாசஸ் உளவு மென்பொருள் தானா என்பது உறுதியாகவில்லை” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசு ஒத்துழைக்கவில்லை என்று நிபுணர் குழு கூறியது தொடர்பாக “உச்ச நீதிமன்றத்தில் எப்படி ஒன்றிய அரசு ஒத்துழைக்கவில்லையோ அதேபோல் விசாரணை ஆணையத்திலும் ஒன்றிய அரசு ஒத்துழைக்கவில்லை போல” என்று உச்சநீதிமன்றம் தனது கண்டனத்தை பதிவு செய்தது.
Source : NDTV
Kallakurichi Sakthi School management in girl student issue | Gowthama sanna | Ravikumar | Shanthi
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.