சட்டவிரோதமாகவும் அரசியலமைப்பிற்கு எதிரான முறையிலும் பறிக்கப்பட்ட காஷ்மீரின் உரிமைகளை மீட்டெடுக்க, உற்சாகமான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.
நேற்று (பிப்பிரவரி 16), ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற அக்கட்சியின் முதல் தொழிலாளர்கள் மாநாட்டில், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹபூபா முஃப்தி கலந்துகொண்டு உரையாற்றினார்.
`காஷ்மீரில் ஒன்பது லட்சம் ராணுவப் படைகள் எதற்கு’ – மெஹ்பூபா முப்தி கேள்வி
அப்போது, “அமைதியான வழிகளையும், ஜனநாயகத்திற்கும் அரசியலமைப்பிற்கும் விரோதமில்லாத வழிகளையும் உபயோகித்து, காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுப்பதற்கு போராடுவோம். இப்போது நிலவும் பிரச்சினைகளுக்கு அவ்வழிகளைக் கொண்டு தீர்வு காண்போம். எந்த வன்முறையும் நமக்கு எந்த நன்மையையும் தரவில்லை.” என்று அவர் கோடிட்டுக் காட்டியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அரசியலமைப்பு மோசடியின் வழியாக, எங்களுடைய அடிப்படை உரிமைகள் கொள்ளையடிக்கப்பட்டது என்றும் அவற்றை மீட்டெடுக்க நாங்கள் போராடுவோம் என்றும் மெஹபூபா முஃப்தி கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “இஸ்லாமியர்களை பெரும்பான்மைக் கொண்ட ஒரு மாநிலம், சில உத்தரவாதங்களுக்கு ஒப்புக்கொண்டு, மதச்சார்பற்ற ஒரு தேசமான இந்தியாவுடன் இணைந்து செயல்பட ஒத்துக்கொண்டதே அன்றி, முழுதாக ஒன்றிணைய சம்மதிக்கவில்லை. ஆனால், புதுடெல்லியோ இந்த சிறப்பம்சத்தின் அடித்தளத்தையே மிதித்து துள்ளுகிறது.” என்று அவர் விமர்சித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.