பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர்களுக்கு பாபா மதோதாஸ் கோவிலுக்குள் அடைக்கலம் கொடுத்து தங்களது மத நல்லிணக்கத்தை இந்து சமூகத்தினர் வெளிப்படுத்தியுள்ளனர்.
பாகிஸ்தானில் பெய்து வரும் பருவகால மழை பாதிப்புகளால் அந்நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால், சாலைகளும், பாலங்களும் முறையே துண்டிக்கப்பட்டும், நீரில் அடித்துச் செல்லப்பட்டும் உள்ளன.
நாட்டில் 3.3 கோடி பேர் வரை பாதிக்கப்பட்டு உள்ளனர். 5 லட்சத்திற்கும் கூடுதலானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். வெள்ளத்திற்கு பின்பு, லட்சக்கணக்கானோர் பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
பாகிஸ்தானின் கச்சி மாவட்டத்தில் ஜலால் கான் என்ற கிராமம் உள்ளது. இங்கு அதிகளவில் இஸ்லாமியர்களே வசித்து வருகின்றனர். இந்த கிராமம் அருகே செல்லும் நாரி, போலன் மற்றும் லெஹ்ரி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக இந்த கிராமம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் அங்குள்ள மக்கள் செய்வதறியாது தவித்தனர். 3 ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அந்த கிராமம் முழுவதும் தண்ணீரில் மூழ்கியது.
இதனால் அங்கு வசித்து வரும் 300க்கும் மேற்பட்ட மக்கள் தங்குவதற்கு இடமின்றி தவித்தனர். ஊரில் உள்ள அனைத்து இடங்களும் தண்ணீரில் மூழ்கியதாலும், சுற்றிலும் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு தண்ணீர் தேங்கியதால் அந்த கிராம மக்கள் தங்க இடமின்றி தவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த ஊரின் அருகே உயரமான நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரு பாபா மதோதாஸ் என்ற இந்து கோவில் மட்டும் தண்ணீரில் மூழ்காமல் இருந்தது. கான்கிரீட் கட்டிடமான அந்த கோவில் உயரமான நிலப்பரப்பில் அமைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அந்த கோவில் மட்டும் வெள்ளத்தில் மூழ்காமல் இருந்துள்ளது. அந்த கோவிலில் இருப்பவர்கள், கிராமத்தில் தங்க இடமின்றி தவித்த மக்களை தங்குவதற்காக கோவிலை திறந்து வைத்து அவர்களை அழைத்தனர். அதன் பேரில் இஸ்லாமிய மக்களும் அந்த கோவிலில் தற்போது தங்கியுள்ளனர் என்று டான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தக் கோவிலில் நுற்றுக்கும் மேற்பட்ட அறைகள் உள்ளதாக அங்குள்ள இந்துக்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஆண்டு தோறும் பலோசிஸ்தான் மற்றும் சிந்து மாகாணத்தில் இருந்து ஏராளமான இந்துக்கள் இந்தக்கோவிலுக்கு வந்து வழிபட்டுச் செல்வது வழக்கம் என்றும் அப்பகுதி மக்கள் சொல்கின்றனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்கள் தங்குவதற்காக கோவிலை திறந்து விட்ட இந்துக்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
பாபா மதோதாஸ் பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பு வாழ்ந்த இந்து துறவி எனக் கூறப்படுகிறது. அவர் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களால் போற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாபா மதோதாஸ் ஒட்டகத்தின் மீது அமர்ந்து பயணம் செய்யும் வழக்கம் உடையவர் எனவும் கூறப்படுகிறது. மக்களைச் சாதி அடிப்படையில் பார்க்கப்படாமல் அவர்களின் நல்ல செயல்களை மட்டுமே வைத்துப் பார்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது
Source : NDTV
Kallakurichi Case Latest Update | Kallakurichi Sakthi School is behind Karthik Pillai – Balabharathi
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.