வரும் 2021-22ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்கூட்டம் நாளைத் தொடங்கும் நிலையில், நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆற்றவுள்ள உரையைப் புறக்கணிக்கவுள்ளதாக 16 எதிர்கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.
நாளை (ஜனவரி 29) நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கவுள்ளது. அதைத் தொடர்ந்து, ஜனவரி 31 ஆம் தேதி பொருளாதார ஆய்வறிக்கையும், பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய பட்ஜெட்டும் தாக்கலும் செய்யப்படவுள்ளன.
“வன்முறையில் ஈடுபட மாட்டோம் என உறுதிமொழி எடுத்தனர்” – விவசாயிகள் போராட்டத்தின் நேரடி சாட்சி
இந்நிலையில், நாளை (ஜனவரி 29) நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை ஆற்றும்போது அதில் பங்கேற்காமல் புறக்கணிக்கவுள்ளதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.
இதுகுறித்து, இன்று (ஜனவரி 28) காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான குலாம்நபி ஆசாத் செய்தியாளர்களிடம், “நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவர் ஆற்றும் உரையைப் புறக்கணிக்க 16 எதிர்க்கட்சிகள் ஒன்றாகச் சேர்ந்து முடிவு செய்துள்ளோம். எதிர்க்கட்சிகளின்றி விவசாய சட்டங்கள் நாடாளுமன்றத்தில் வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்டதற்கு எதிராக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.” என்று கூறியதாக ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.
விவசாயிகளின் குடியரசு தின பேரணியில் நடந்தது என்ன? – ஊடகங்களின் பிரச்சாரம் உண்மையா?
புறக்கணிப்பு தொடர்பாக, இன்று (ஜனவரி 28) எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “டெல்லியின் எல்லைகளில் லட்சக்கணக்கான விவசாயிகள் கடும் குளிர், மழையைப் பொருட்படுத்தாமல், தங்களின் உரிமைக்காகவும், நீதிக்காகவும் போராடி வருகிறார்கள். இதுவரை போராட்டத்தில் 155 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். ஆனால் இன்னும் மத்திய அரசு தன் நிலையிலிருந்து மாறாமல், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் பதில் அளிக்கிறது.” என்று அறிக்கை விமர்சித்துள்ளது.
“விவசாயிகளின் போராட்டம் அமைதியாகவே நடந்திருக்கிறது. ஆனால், துரதிருஷ்டமாகக் கடந்த 26-ம் தேதி சில வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த வன்முறையில் டெல்லி காவல்துறையினர் அடைந்த காயத்துக்கு நாங்கள் வருத்தம் தெரிவிக்கிறோம். இந்தக் கலவரம் தொடர்பாகச் நியாயமான விசாரணை நடத்தி, இதில் மத்திய அரசின் பங்கு என்ன என்பதைக் கண்டறிய வேண்டும்.” என்று அவ்வறிக்கை வலியுறுத்தியுள்ளது.
’நேற்று விவசாயிகளுக்கு நன்றிக்கடன்; இன்று தடியடி, கல்வீச்சு’ – இரா.முத்தரசன் கண்டனம்
மேலும், “விவசாய சட்டங்கள் மாநிலங்களின் உரிமைகள்மீதான தாக்குதல் மட்டுமன்றி அரசியலமைப்புச் சட்டத்தில் கூட்டாட்சித் தத்துவத்தை மீறுவதாகும். இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால், இந்தியாவின் உணவுப்பாதுகாப்பு, குறைந்தபட்ச ஆதாரவிலை, பொதுவிநியோக முறையைச் சிதைத்துவிடும்.” என்று கூறப்பட்டுள்ளது.
மாநிலங்களுடனும், விவசாயிகள் சங்கங்களுடனும், தேசிய கருத்தொற்றுமை இல்லாமல் எந்தவிதமான ஆலோசனை விவாதங்கள் இல்லாமல் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் விவாதங்கள் இல்லாமல், எதிர்க்கட்சிகளை அடக்கி வைத்து இந்த விவசாய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று எதிர்க்கட்சிகளின் அறிக்கை விமர்சித்துள்ளது.
விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் ஒருவர் உயிரிழப்பு – காவல்துறை சுட்டதுதான் காரணமா?
இது நாடாளுமன்ற விதிமுறை செயல் மரபுகளை மீறியுள்ளது. இந்தச் சட்டத்தின் அரசியலமைப்பு அந்தஸ்தும், நிறைவேற்றப்பட்ட விதமும் கேள்விக்குள்ளாகியுள்ளதாகக் கூறும் அறிக்கை, “பாஜக அரசும், பிரதமரும் அகங்காரத்துடனும் பிடிவாதத்துடனும், ஜனநாயக விரோதத்துடன் நடக்கிறார்கள். மேலும், மத்திய அரசு உணர்வற்று இருப்பது அதிரச்சியளிக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளது.
விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கிலும், விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், குடியரசுத் தலைவர் உரையை நாளை (ஜனவரி 29) 16 எதிர்க்கட்சிகளும் சேர்ந்து புறக்கணிக்கிறோம் என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.