Aran Sei

‘தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது; தவறு செய்யும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்’ – எடப்பாடி பழனிசாமி

ல்லூரி மாணவர் மணிகண்டன், வியாபாரி உலகநாதன் ஆகியோரின் மரணத்திற்குக் காரணமான காவலர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, இன்று(டிசம்பர் 7), எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து, தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, அரசு அதிகாரிகள் சமூக விரோதிகளாலும், ஆளும் திமுகவினராலும் மிரட்டப்படுவது தொடர்கதையாகி உள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியிலும், அவரது மறைவுக்குப் பிறகு அதிமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோதும், தமிழக காவல்துறை சுதந்திரமாகச் செயல்பட்டு, அகில இந்திய அளவில் சிறந்த காவல் துறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பல விருதுகளைப் பெற்றுள்ளது. தமிழகத்தில் அதிமுக அரசில் சட்டத்தின் ஆட்சி உறுதி செய்யப்பட்டது.

ஆனால், கடந்த 6 மாத கால திமுக ஆட்சியில், தமிழக காவல் துறை சுதந்திரமாகச் செயல்பட முடியாமல், சமூக விரோத சக்திகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் தவித்ததைக் கண்டு, ஆளுநர் காவல்துறைத் தலைவரை நேரில் அழைத்து விசாரித்ததைத் தொடர்ந்து, தமிழகமெங்கும் ஒரே நாளில் ஆயிரக்கணக்கான சமூக விரோதிகள் கைது செய்யப்பட்டனர். இது பற்றி அனைத்து ஊடகங்களும், நாளிதழ்களும் விரிவாக செய்திகள் வெளியிட்டன.

இதற்கிடையில், தமிழகக் காவல் துறையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் விதமாக, காவல் துறையிலேயே பணிபுரியும் ஒரு சிலரின் செயல்பாடுகள் உள்ளன. ஏற்கெனவே எனது முந்தைய அறிக்கையில் ஒரு சில முக்கிய நிகழ்வுகளை நான் விரிவாகக் கூறியுள்ளேன். கடந்த ஓரிரு நாட்களில் நடந்த ஒரு சில நிகழ்வுகளை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

மதுரையில் சினிமா பார்த்து விட்டு, உறவினர்களுடன் வந்த ஒரு இளம் பெண்ணை மிரட்டி அழைத்துச் சென்ற காவலர் ஒருவர், அவரைப் பாலியல் பலாத்காரம் செய்ததோடு, பணத்தையும் பறித்துச் சென்றதாக காவலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இரண்டாவதாக, செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் கவிதா என்ற பெண் காவலர், தன்னுடன் பணிபுரியும் காவலர்கள் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டுவதாகவும், அவர்கள் தன்னை மனதளவில் மிரட்டுவதாகவும், இதுபற்றி காவல்துறை துணைக் கண்காணிப்பாளரிடம் புகார் செய்தும் பலனில்லை என்றும், தந்தை இறந்து 2 மாதங்களாகிய நிலையில், பாம்பு கடிபட்டு சிகிச்சை மேற்கொண்டு வரும் தனது தாயாரை உடனிருந்து கவனித்துக்கொள்ள அனுமதி பெற்று வார விடுமுறைக்குச் சென்ற தனக்கு ஆப்சென்ட் போடுவதாகவும், மனிதனை மனிதனாக நடத்துங்கள் என்று உடன் பணிபுரியும் காவலர்களுக்கு அறிவுரை கூறி, வாழப் பிடிக்காமல் உலகை விட்டே பிரிவதாகக் காவல்துறை கண்காணிப்பாளருக்கு கடிதம் எழுதிவிட்டுச் சென்ற பெண் காவலர் கவிதாவைக் காப்பாற்றி அவரது வீட்டிற்குப் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டார் என்று செய்திகள் கூறுகின்றன.

எல்கர் பரிஷத்: சுதா பரத்வாஜின் பிணையை எதிர்த்து என்ஐஏ மேல்முறையீடு – நிராகரித்த உச்ச நீதிமன்றம்

மூன்றாவதாக, சென்னை தலைமைச் செயலகத்தில், 04.12.2021 அன்று இரவு சுமார் 8 மணி அளவில், ராணுவ அணிவகுப்பு மைதானம் அருகே நடந்து சென்ற ராணுவ வீரரைத் திருடர்கள் வழிமறித்து கைப்பேசியையும், ஆயிரம் ரூபாயையும் பறித்ததாகவும், அந்த ராணுவ வீரர் கூச்சலிட்டவுடன் அருகில் இருந்தவர்கள் வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு நபர்களைப் பிடித்து, பிறகு காவல் துறையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் நாளிதழில்களில் செய்திகள் வந்துள்ளன.

மாநிலத் தலைநகராம் சென்னையில், 24 மணி நேரமும் காவல் துறையின் கடுமையான கட்டுப்பாட்டில் உள்ள தலைமைச் செயலகத்தில் நடந்துள்ள இந்தச் சம்பவம் காவல் துறையில் ஒரு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

நான்காவதாக, விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் பெட்டிக் கடை வைத்துள்ள வியாபாரி உலகநாதன் (வயது 63), ரெய்டுக்கு வந்த காவல் துறையினரிடம் வாக்குவாதம் செய்ததாகவும், அப்போது காவலர்களால் தாக்கப்பட்டு சுயநினைவின்றி இருந்த வியாபாரி உலகநாதனை, அவரது குடும்பத்தினர் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், உலகநாதன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.

போலீஸார் தாக்கியதால் வியாபாரி உலகநாதன் இறந்துவிட்டதாகவும், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யும்படி அவரது குடும்பத்தினரும், பொதுமக்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

ஒமைக்கரானால் தடுப்பூசி போடாதவர்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்பு அதிகம் – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

ஐந்தாவதாக, நேற்று முன்தினம் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள நீர்கோழி ஏந்தல் என்ற கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான மணிகண்டன் என்ற கல்லூரி மாணவர், முதுகுளத்தூர் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், பிறகு வீட்டில் மர்மமான முறையில் இறந்துவிட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. மணிகண்டனும், அவரது இரு நண்பர்களும், இருசக்கர வாகனத்தில் சென்றபோது, கீழத்தூவல் என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸார், அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தச் சொல்லியபோது, நிற்காமல் சென்ற அவர்களை மடக்கிப் பிடித்துள்ளனர். அப்போது, மணிகண்டனுடன் வந்த இரு நண்பர்கள் தப்பி ஓடிவிட்டனர். மணிகண்டனை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றதாகச் செய்திகள் கூறுகின்றன.

4.12.2021 – சனிக் கிழமை மாலை 4 மணிக்கு காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட மணிகண்டனிடம் மூன்று மணி நேரம் விசாரித்த போலீஸார், இரவு 7 மணிக்கு அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டதாகவும், காவல் நிலையத்தில் இருந்து வீடு திரும்பிய மணிகண்டன், தன்னை போலீஸார் கடுமையாகத் தாக்கியதாகக் கூறியதாக, அவரது தம்பி அலெக்ஸ் கூறினார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

காவல் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு வந்த மணிகண்டன், ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு 1.30 மணிக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார் என்றும், போலீஸார் தாக்கியதால்தான் கல்லூரி மாணவர் மணிகண்டன் உயிரிழந்ததாகக் கூறி பொதுமக்களும், உறவினர்களும் முதுகுளத்தூர் – பரமக்குடி சாலையில் தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர் என்று ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வெளி வந்துள்ளன.

கல்லூரி மாணவன் மணிகண்டன் மரணத்திலும் மற்றும் வியாபாரி உலகநாதன் மரணத்திலும் காவல் துறையைச் சேர்ந்தவர்கள் மீது குற்றச்சாட்டுகள் கூறப்படுவதால், இவ்வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 லட்சம் ரூபாய் நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் இந்த திமுக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

‘என் மகன் நிரபராதி என நிரூபிக்கவே போராட வேண்டியுள்ளது’ – காஷ்மீர் என்கவுண்டரில் கொல்லப்பட்டவரின் தந்தையின் போராட்டம்

இந்த அரசின் ஆட்சியில் பெண்களும், பொதுமக்களும் சுதந்திரமாக நடமாட இயலவில்லை. தங்கள் கைகளில் இருக்கும் அதிகாரம் நிரந்தரமானது என்ற இறுமாப்பில் இந்த ஆட்சியாளர்கள் சமூக விரோதிகளுக்கும், காவல் துறையில் உள்ள ஒரு சிலருக்கு ஆதரவாகவும், ஒரு சிலரைப் பழிவாங்கியும், ஆட்சி நடத்துவது ஜனநாயகத்திற்கு விரோதமானது. சட்டம்- ஒழுங்கு சீர்குலைவதைப் பொறுப்புள்ள எதிர்க்கட்சியான நாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

அதோடு இதே நிலை தமிழகத்தில் தொடர்ந்தால் மக்கள் வீதிகளில் வந்து போராடும் நிலை உருவாகும். காவல் துறையில் நேர்மையான அதிகாரிகள் பலர் உள்ளனர். அவர்களுக்குச் சரியான பணியிடங்களை வழங்குங்கள். சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்துங்கள், தவறு செய்யும் காவலர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுங்கள் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

‘தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது; தவறு செய்யும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்’ – எடப்பாடி பழனிசாமி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்