மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் மேற்கொண்டு வரும் போராட்டங்களின் ஒரு பகுதியான டிராக்டர் பேரணியில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி போராடி வரும் விவசாயிகளுடன் அரசு மேற்கொண்ட பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து, போராட்டத்தின் ஒரு பகுதியாகக் குடியரசு தினமான இன்று (26.01.21) டிராக்டர் பேரணியை அறிவித்து நடத்தி வருகின்றனர். அதில் பங்கேற்ற டிராக்டர்கள் டெல்லி எல்லையில் இருந்து புறப்பட்டு டெல்லிக்குள் பேரணி தொடங்கும் பகுதிக்கு வந்து சேர தொடங்கியுள்ளன.
இந்த டிராக்டர் பேரணியில் பங்கேற்க, காலையிலிருந்து நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் டெல்லி-ஹரியானா எல்லையான சிங்கு எல்லையில் குவியத் தொடங்கியுள்ளனர். பின்னர், சிங்கு எல்லையிலிருந்து புறப்பட்ட ஆயிரக்கணக்கான டிராக்டர்கள், கஞ்சவாலா சவுக், அச்சாண்டி எல்லை, கேஎம்பி ஜிடி சாலை வழியாக டெல்லிக்குள் நுழைந்துள்ளன.
மத்திய டெல்லி பகுதிக்குள் பேரணி டிராக்டர்கள் நுழையாத வகையில் பல்வேறு தடுப்புகளை டெல்லி காவல்துறையினர் அமைத்துள்ளனர். முக்கியமாக, சிங்கு எல்லையிலிருந்து டெல்லிக்குள் நுழையும் கர்னால் புறவழிச்சாலையில் கன்டெய்னர் பெட்டிகளைக் கொண்டு தற்காலிகச் சுவரை காவல்துறையினர் உருவாக்கியுள்ளனர்.
1.5 லட்சம் டிராக்டர்களுடன் விவசாயிகளின் படை தயார் – அணிவகுப்பால் அதிரப்போகும் டெல்லி
மத்திய டெல்லி ஐடிஓ பகுதியின் உள்ள தீன் தயாள் உபாதயா சாலையில் பேரணி வந்து கொண்டிருந்த நிலையில், டிராக்டர் கவிழ்ந்து ஒரு விவசாயி உயிரிழந்திருப்பதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
காவல்துறை சுட்டதில் டிராக்டர் கவிழ்ந்திருக்கலாமென விவசாயிகள் குற்றம் சாட்டியிருப்பதாகவும், இறந்த விவசாயின் உடலிற்கு விவசாயிகள் தேசிய கொடியை போர்தியதாகவும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் கூறியுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.