சுதந்திர தின பெருவிழாவில் தமிழ்நாட்டின் அனைத்து நகராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் எவ்வித சாதிய பாகுபாடின்றி தேசியக் கொடியை ஏற்றுவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். .
அவர் எழுதியுள்ள கடிதத்தில், சுதந்திர தின விழாவில் சென்னை தலைமைச் செயலகம் முதற்கொண்டு கிராம ஊராட்சிகள் வரை அனைத்து தலைமை அலுவலக வளாகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்றிவைப்பது மரபாகும். ஒரு சில கிராம ஊராட்சிகளில், சாதியப் பாகுபாடுகள் காரணமாக தேசியக் கொடியை ஏற்றுவதில் பிரச்சனைகளோ, தேசியக் கொடியையும், அதனை ஏற்றுபவரையும் அவமதிக்கும் செயலோ நடைபெறலாம் என தகவல்கள் பெறப்பட்டுள்ளது..
இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவுக்கூறு-17ன்படி “தீண்டாமை” ஒழிக்கப்பட்டு அதன் எந்த வடிவத்திலும் செயல்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. “தீண்டாமை காரணமாக எழும் எந்த ஊனத்தையும் அமல்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். 1989-ஆம் ஆண்டு பட்டியலிடப்பட்ட சாதி மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் பிரிவு 3 (1)(m)ன்படி பட்டியல் சாதி அல்லது பழங்குடியினரின் உறுப்பினர் அல்லாத எவரும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் சாதி அல்லது பழங்குடியினரை சேர்ந்த நகராட்சி, ஊராட்சி மன்றத் தலைவர், உறுப்பினர், அலுவலக பணியில் உள்ளவர்கள் என எவரையும் அவர்களது அலுவலகப் பணிகளையும் மற்றும் கடமைகளையும் செய்யவிடாமல் தடுப்பதோ அல்லது அச்சுறுத்துவதோ தண்டனைக்குரிய குற்றமாகும்.
மேலும் சாதி அல்லது பழங்குடியினரின் உறுப்பினர் அல்லாத எவரும் மேற்சொன்ன வகுப்பினரை வேண்டுமென்றே அவமதித்தால் அல்லது பொதுமக்கள் பார்வையில் எந்த இடத்திலும் அவமானப்படுத்தும் நோக்கத்துடன் அச்சுறுத்தல் தண்டனைக்குரிய குற்றமாகும். இதனைக் கருத்தில் கொண்டு, சுதந்திர தின அமுதப் பெருவிழாவில் எவ்வித சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களைக் கொண்டு. அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளின் தலைமை அரசு அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்துவதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அதுபோல, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்திலும், எவ்வித சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், பொதுமக்கள் போன்றோர் பெருமளவில் கலந்து கொள்வதை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.
காஞ்சிபுரம்: டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு காவித் துண்டு அணிவிப்பு – விசிகவினர் போராட்டம்
மேலும், இதனை செயல்படுத்துவதில் ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின், போதுமான காவல் துறையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும். இந்தப் புகார்களைக் கையாள ஒரு குறிப்பிட்ட கைப்பேசி உதவி எண் அல்லது ஒரு அலுவலரோ அறிவிக்கப்படலாம். இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஓர் அறிக்கையினை அரசுக்கு வருகிற 14-ம் தேதி மாலைக்குள் வந்து சேருமாறும், சுதந்திர தின விழா நிறைவுற்றதும், அது குறித்த அறிக்கையை 17-ம் தேதிக்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுவதாக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.
kallakurichi sakthi school teacher turns approver? | krithika teacher petition | balan interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.