Aran Sei

“புயலால் பாதிக்கப்படும் மக்களுக்குப் பள்ளிவாசல்கள் பாதுகாப்பு மையமாக விளங்கட்டும்” – டிஎன்டிஜே

credits : the indian express

நிவர் புயலினால் பாதிக்கப்படும் மக்களைத் தங்க வைத்துக்கொள்ள பள்ளிவாசல்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தொண்டர்களுக்குத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அழைப்பு விடுத்துள்ளது.

நிவர் புயல் தென்மேற்கு வங்கக் கடலில் கடந்த மூன்று மணி நேரமாக நிலை கொண்டுள்ளது. மாமல்லபுரம்-காரைக்கால் இடையில் புயல் கரையைக் கடக்கும் என்பதால், கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று (100 முதல் 120 கிமீ வேகம்) வீசுவதுடன் கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

நிவர் புயல் நாளை மாலை புதுவையில் கரையை கடக்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது என தெரிவித்துள்ள அவர், தமிழகத்தின் எட்டு மாவட்டங்களில் அதீத கனமழை பெய்ய கூடும் எனவும் கூறியுள்ளார்.

புயலை எதிர்கொள்ள, வருவாய், உள்ளாட்சி, தீயணைப்பு, பொதுப்பணி, நெடுஞ்சாலை, நகராட்சி, மின்சார வாரியம், சுகாதாரம் மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் அடங்கிய மீட்பு குழுவினர், பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் முகாமிட வேண்டும் என தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”தற்போது எதிர் நோக்கி இருக்கும் நிவர் புயல் பாதிப்பில் இருந்து மக்களை காக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணி செய்யவும் களம் இறங்கி பணியாற்ற தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்கள் தயாராக இருங்கள்” என அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் ”பாதிக்கப்பட்ட மக்களை, பாதுகாப்பாக தங்க வைக்க பள்ளிவாசல்களை பயன் படுத்துங்கள். பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பு மையமாக பள்ளிவாசல்கள் விளங்கட்டும். ஏழை எளிய மக்களுக்காக பள்ளிவாசல்கள் திறந்தே இருக்கட்டும்” என அறிக்கியல் கூறப்பட்டுள்ளது.

”பிறர் நலம் நாடுவதே இஸ்லாம் என்ற நபிகள் நாயகத்தின் கூற்றை உண்மை படுத்திடும் வகையில் மக்கள் துயர் துடைக்கும் வகையில் களமிறங்கி அவர்களுக்கு தேவையான உதவிகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்கள் செய்து கொடுக்க தயாராக இருக்க வேண்டும்” என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“புயலால் பாதிக்கப்படும் மக்களுக்குப் பள்ளிவாசல்கள் பாதுகாப்பு மையமாக விளங்கட்டும்” – டிஎன்டிஜே

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்