Aran Sei

தொழிலாளர் நலனை நசுக்கும் மத்திய அரசு – மே 17 இயக்கம்

Image Credits: The Indian Express

தொழிலாளர்களின் வேலை நேரத்தை அதிகப்படுத்தும் புதிய தொழில் சட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெறு வேண்டும் என்று மத்திய அரசிடம் மே 17 இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

மத்தியில் ஆளும் பாஜக அரசு ’தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் 2020’ எனும் சட்டத்தைக் கடந்த செப்டம்பர் மாதம் 19-ம் தேதி அறிமுகப்படுத்தியது. இதற்கு செப்டம்பர் 28-ம் தேதி குடிஅரசு தலைவரின் ஒப்புதல் கிடைத்தது. ‘தொழிலாளர் சீர்திருத்தச் சட்டம் 2020’ என்று கூறப்பட்ட நான்கு குறியீடுகளில் இதுவும் ஒன்றாகும்.

இது தொடர்பாக மே 17 இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகமெங்குமிருக்கிற தொழிலாளர்கள் இன்று பெற்றிருக்கிற குறைந்தபட்ச உரிமைகள் கூடப் பல்வேறு தொழிலாளர்களின் உயிர்களை கொடுத்து பெற்றதே. அதுபோலத்தான் இந்தியாவிலும், தொழிலாளர்கள் நல உரிமைகள் யாவும் எளிதில் கிடைத்ததல்ல. அப்படிப்பட்ட உரிமைகள் அனைத்தையும் பறிக்கின்ற வேலைகள் இந்திய அரசு கடந்த முப்பதாண்டுகளாகத் தொடர்ச்சியாக நடந்துவருகிறது. அதில் உச்சம் தான் தற்போது ஆட்சியிலிருக்கிற மோடி அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகள்” என்று கூறப்பட்டுள்ளது.

“அதாவது தொழிலாளர்களுக்கென்று இருந்த பல்வேறு சட்டங்களை நான்கு சட்டங்களாக மாற்றி நீர்த்துப்போகச் செய்துள்ளது. தொழிலாளர்களின் வருங்கால வைப்புநிதிக்கான வட்டியை தொடர்ந்து குறைத்துள்ளது. இது போன்று பலவற்றை சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வரிசையில், மிக மோசமாகத் தொழிலாளர் விரோத சட்டத்தைச் சத்தமே இல்லாமல் கொரோனா காலத்தில் நிறைவேற்றியிருக்கிறது இந்த மோடி அரசு” என மே 17 இயக்கம் தன் அறிக்கையில் கூறியுள்ளது.

“‘தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் 2020’ என்ற இந்தச் சட்டத்தைக் கடந்த செப்டம்பர் மாதம் 19-ம் தேதி அறிமுகப்படுத்தி, இரண்டு அவைகளிலும் எந்த விவாதமும் இல்லாமல் நிறைவேற்றிச் செப்டம்பர் 29-ம் தேதி அதை அரசின் அரசாணையிலும் அதிகாரபூர்வமாக வெளியிட்டுவிட்டது இந்த மோடி அரசு” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்தச் சட்டத்தின் படி, தொழிலாளர்களின் வேலைநேரம் தற்போது இருக்கும் 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக மாற்றப்படும். பெண்களும் இனி இரவுப் பணிக்கு (Night Shift) வர வேண்டும்” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“நிரந்தர/பணி உத்தரவாத தொழிலாளர் முறைகளை ஊக்குவிப்பதை தவிர்த்து, பணி நிரந்தரமில்லாத ஒப்பந்த தொழிலாளர்கள் முறையை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கான பயணச்செலவு, பயிற்சி சான்றிதழ், அனுபவ சான்றிதழ் போன்று பல்வேறு திருத்தங்களை கொண்டுவந்துள்ளது. முழுக்க முழுக்க தொழிலாளர் விரோத அம்சங்களை கொண்டதாகவே இந்தச் சட்டம் தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆகவே, தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகளை குழிதோண்டி புதைக்கும் இந்தச் சட்டத்தை உடனடியாக மக்கள் விரோத மோடி அரசு திரும்பபெற்றுக்கொள்ள வேண்டும்” என்று மே 17 இயக்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அரண்செய் யுடன் பேசிய அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் உறுப்பினர் ராகுல் பாஸ்கர் “இந்த குறிப்பிட்ட சட்டம் மட்டும் அல்லாமல் 4 தொழிலாளர் குறியீடுகளையும் திரும்ப பெற வேண்டும் என்பது தான் தொழிற்சங்கத்தின் நிலைப்பாடு. இவை அனைத்தும் போராடி பெற்ற தொழிலாளர் சட்டங்களை நீர்த்துப்போக வைக்கும் செயல்” என்று கூறினார்.

“புதிய தொழிலாளர் சட்டங்களின் படி ஒரு வேலை நிறுத்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமனில் 60 நாட்களுக்கு முன் நோட்டீஸ் வழங்க வேண்டும்.  ஒரு நிறுவனத்தில் 7 பேர் இருந்தால் தொழிற்சங்கத்தை ஆரம்பிக்கலாம் எனும் நிலை மாறி 10 சதவீத தொழிலாளர்கள் இருந்தால் தான் தொழிற்சங்கத்தை ஆரம்பிக்கும் நிலை உருவாகி உள்ளது. அதாவது, 1000 பேர் பணிபுரியும் நிறுவனத்தில் தொழிற்சங்கத்தை கட்டியமைக்க 100 தொழிலாளர்கள் உடன் இருக்க வேண்டும். இது போன்ற, தொழிலாளர் நலன் மீது பெரும் தாக்குதலை ஏற்படுத்தும் இந்தச் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” என்று வங்கி ஊழியர்கள் சங்கத்தைச் சேர்ந்த ராகுல் கூறினார் .

தொழிலாளர் நலனை நசுக்கும் மத்திய அரசு – மே 17 இயக்கம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்