நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஒப்புதலுக்கு அனுப்பாமல் இருந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக பதவி விலக வேண்டும் என தி.மு.க. மக்களவை குழுத்தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதா குடுயரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்படாமல் ஆளுநரிடம் உள்ளது. இது தொடர்பாக தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட 7 கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க திட்டமிட்டு இருந்த நிலையில் மூன்றாவது முறையாக இந்த சந்திப்பு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து தி.மு.க மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் அனைத்துக் கட்சிப்பிரதிநிதிகளுடன் டெல்லியில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, தமிழகத்தில் நீட் தேர்வுக்கு தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க. உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்று கூறியுள்ளார்.
மேலும், நீட் தேர்வு விலக்கு தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இது தொடர்பாக ஆளுநரையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வலியுறுத்தினார். ஆனால் இதுவரை ஆளுநர் மசோதாவை குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு ஆளுநர் அனுப்பவில்லை. நீட் தேர்வுக்கு முழு பொறுப்பு ஆளுநர் தான்.
இதுகுறித்து எடுத்துரைக்க ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கடந்த 29ம் தேதி சந்திக்க சென்றோம், ஆனால் இறுதியில் சந்திப்பதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது. இதுநாள் வரை உள்துறை அமைச்சர் எங்களை சந்திக்க அனுமதி வழங்கவில்லை.
உள்துறை அமைச்சர் அமித்ஷா எங்களை சந்திக்க மறுக்கிறார், இது மிகவும் கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார். மேலும், அரசியல் காரணமாக அமித்ஷா எங்களை சந்திக்க மறுக்கிறார் என நினைப்பதாக கூறியுள்ளார்.
தமிழகத்துக்கு நீட் தேர்வு விலக்கு குறித்து உள்துறை அமைச்சகத்தில் மீண்டும் மனு அளிக்கப்பட்டுள்ளது. குடியரசு தலைவர், உள்துறை அமைச்சர் எங்களை சந்திக்க தவிர்க்கின்றனர் என சொல்லக்கூடாது,
இந்த விவகாரத்தில் ஒட்டுமொத்த பொறுப்பு ஆளுநர் தான், தவறு செய்யும் ஆளுநர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று தி.மு.க. மக்களவை குழுத்தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.