விசாரணை அமைப்புகளை ஒரே கூரையின் கீழ் கொண்டு வரும் வகையில் சுயாதீன அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.
சில வழக்குகளில் மத்திய புலனாய்வுத் துறையின் (சிபிஐ) நடவடிக்கைகளும் செயலற்ற தன்மைகளும், சிபிஐமீது மக்களுக்கு கேள்விகள் எழுகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘ஜனநாயகம்: புலனாய்வு அமைப்புகளின் பங்கு மற்றும் பொறுப்புகள்’ என்ற தலைப்பில் பேசியுள்ள என்.வி.ரமணா, ”சில காவல்துறையினர் மிக உயர்ந்த தியாகத்தைச் செய்திருக்கும்போது, கஷ்ட காலங்களில் கூட மக்கள் காவல்துறையினரை அணுக தயங்குவது கேலிக்கூத்தாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
”நம்மைப் போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டிற்கு ஜனநாயகம் மிகவும் பொருத்தமானது. சர்வாதிகார ஆட்சியின் மூலம் வளமான பன்முகத்தன்மையை நிலைநிறுத்த முடியாது என்பதையும் இந்தியாவின் அனுபவம் இதுவரை நிரூபித்துள்ளது” என என்.வி. ரமணா கூறியுள்ளார்.
சிபிஐ விசாரணைக்கான பொது அனுமதியை திரும்பப்பெற்ற மேகாலாயா அரசு – சிபிஐ தகவல்
”சிபிஐ.யைப் பொறுத்தவரை, அதன் ஆரம்ப கட்டத்தில் அது பொதுமக்களின் அபரிமிதமான நம்பிக்கையைப் பெற்றிருந்தது. அது பாரபட்சத்தன்மை மற்றும் சுதந்திரத்தின் அடையாளமாக இருப்பதால், விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் நீதிமன்றத்தில் நிரம்பி வழிந்தன. மக்கள் அவர்களின் சொந்த மாநில காவல்துறையின் திறமை மற்றும் பாரபட்சத்தன்மையை சந்தேகிக்கும் போதெல்லாம், நீதியைப் பெற சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரினர்” என அவர் தெரிவித்துள்ளார்.
”ஆனால், காலப்போக்கில், மற்ற புகழ்பெற்ற நிறுவனங்களைப் போல சிபிஐயும் பொது ஆய்வுக்கு உட்பட்டுள்ளது. அதன் நடவடிக்கைகள் மற்றும் செயலற்ற தன்மைகள் சில சந்தர்பங்களில் அதன் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளன. சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளை ஒரே கூரையின் கீழ் கொண்டு வரும் வகையில், சுயாதீன அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டிய உடனடி தேவை உள்ளது. இந்த அமைப்பு ஒரு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட வேண்டும். அதன் அதிகாரங்கள், செயல்பாடுகள் மற்றும் அதிகார வரம்புகளை தெளிவாக வரையறுக்க வேண்டும். அந்த சட்டம் மிகவும் தேவையான சட்டமன்ற மேற்பார்வைக்கு வழிவகுக்கும்” என்று நீதிபதி என்.வி.ரமணா கூறியுள்ளார்.
”ஒரு சுயாதீன, பாரபட்சமற்ற தலைமையின் கீழ் இந்த அமைப்பு இயங்க வேண்டும். சிபிஐயின் தலைவரை நியமிப்பதை போல இதன் தலைவரின் நியமனமும் இருக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
”இந்த அமைப்பின் தலைமைக்கு உதவ பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற ஒரு குழு நியமிக்கப்பட வேண்டும். ‘பலமுறை விசாரணைக்கு’ இந்த அமைப்பு முற்றுப்புள்ளி வைக்கும். அண்மைக்காலங்களில், ஒரே சம்பவத்தைப் பல அமைப்புகள் விசாரிக்கின்றன. இது பொரும்பாலும் ஆதாரங்களை நீர்த்துப் போகச் செய்வதற்கும், வாக்குமூலங்களில் முரண்பாடுகள் ஏற்படுத்துவதற்கும் நிரபராதிகளை நீண்டகாலம் சிறையில் வைப்பதற்கும் வழிவகுக்கிறது” என்று நீதிபதி என்.வி.ரமணா கூறியுள்ளார்.
மக்கள் துன்புறுத்துவதற்கு விசாரணை அமைப்புகள் ஒரு கருவியாக பயன்படுத்தப்படுவதை இந்த அமைப்பு தடுக்கும் என்று உச்ச நீதிமன்றத் தலைமை என்.வி. ரமணா குறிப்பிட்டுள்ளார்.
Source: The Wire
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.