சட்டவிரோதமானவையாகவும் மாணவர்களை தவறாக வழிநடத்தும் வகையிலும் ஃபத்வாக்களை (உத்தரவுகளை) மாணவர்கள்மீது திணிப்பதாக கூறப்படும் இஸ்லாமிய செமினரி தாருல் உலூம் தியோபந்தின் இணையதளத்தை விசாரிக்குமாறு உத்தரப் பிரதேச அரசுக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுபோன்ற உள்ளடக்கத்தை அகற்றும் வரை இணையதளத்தை முடக்கி வைக்குமாறு மாநில தலைமைச் செயலாளரிடம் ஆணையம் கேட்டுக் கொண்டது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், சிறார் நீதிச் சட்டம், 2015 மற்றும் கல்வி உரிமைச் சட்டம், 2009 ஆகியவற்றின் விதிகளை மீறியதாகக் குற்றஞ்சாட்டப்படும் பள்ளியின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை 10 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரப்பிரதேச மாநில அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டின் சட்டத்திட்டங்களின் கீழ் வழங்கப்பட்ட விதிகளுக்கு எதிரான ஃபத்வாக்களின் பட்டியலை அந்த இணையதளம் கொண்டுள்ளதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரிலேயே செயல்படுவதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு, மதரஸாக்களையும் அவற்றின் கல்வியையும் குறிவைக்கும் நோக்கில், சில ஃபத்வாக்களை மட்டும் எடுத்துக்கொண்டு, அவற்றை பரபரப்பாக்கும் முயற்சி இது என்று தெரிவித்துள்ளது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் தேசிய செயலாளர் ஃபவாஸ் ஷாஹீன், “ஃபத்வாக்கள் என்பது தனிப்பட்ட மற்றும் சமூகசார் வாழ்க்கை தொடர்பான பல்வேறு காரணிகள் குறித்த மத அறிஞர்களின் தனிப்பட்ட பார்வைகள். உண்மையில், இந்த அறிஞர்கள் பெரும்பாலும் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளவர்கள். மேலும் அவர்களில் எவருக்கும் சட்டப்பூர்வ அல்லது நிறுவன அங்கீகாரம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா – தப்லீகி ஜமாத்தை பழித்த பாஜகவும் ஊடகங்களும் மகா கும்பமேளா கூட்டம் பற்றி என்ன சொல்கின்றன?
“ஒரு மதத்தை தங்கள் சொந்த புரிதலின்படி பின்பற்ற மக்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது. பரம்பரை, திருமணம், விவாகரத்து, குழந்தை தத்தெடுப்பு உள்ளிட்ட தனிப்பட்ட விவகாரங்கள், அந்தந்த சமூகங்கள் மற்றும் மதங்களின் பிரதியேக வழக்கங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சட்டங்களால் கண்காணிக்கப்படும் என்பது இந்திய அரசியலமைப்பில் உள்ள ஒரு தீர்க்கமான நிலைப்பாடு” என்று இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் தேசிய செயலாளர் ஃபவாஸ் ஷாஹீன் குறிப்பிட்டுள்ளார்.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.