ஓய்வுபெற்ற முன்னாள் கடற்படைத் தலைவர் அட்மிரல் லக்ஷ்மிநாராயண் ராம்தாஸ், தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திராவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தர்ம சன்சத் நிகழ்ச்சியில் சிறுபான்மையினர்மீது வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளதோடு, அந்நிகழ்ச்சி அரசியலமைப்புச் சட்டம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் நன்னடத்தை விதிகளை மீறும்படி உள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
‘தர்ம சன்சத் நிகழ்ச்சிகள்: வன்முறையைத் தூண்டுதல்களும் தேசிய பாதுகாப்பும்’ என்ற தலைப்பில் ஜனவரி 12 அன்று எழுதப்பட்ட இக்கடிதத்தில், வழக்கறிஞர்கள், விளையாட்டு வீரர்கள், உச்ச நீதிமன்றம் போன்றவற்றால், தானாக முன்வந்து இது குறித்து பேசி கவனப்படுத்தியும் குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை என்று லக்ஷ்மிநாராயண் ராம்தாஸ் குறிப்பிட்டுள்ளார்.
ஹரித்வாரில் இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்பு பேச்சு – புலம்பெயர் இந்தியர்கள் கண்டனம்
“பொதுதளத்தில் வெறுப்பை வெளிப்படுத்துவதையும் வன்முறையைத் தூண்டுவதையும் நாங்கள் அனுமதிக்க முடியாது. இவை உள்நாட்டுப் பாதுகாப்பில் கடுமையான பிரச்சனைகளை உருவாக்குவதோடு, நமது நாட்டின் சமூகக் கட்டமைப்பையே சீரழித்துவிடும். ஆறு முன்னாள் தலைமை தளபதிகள், நாற்பதுக்கும் மேற்பட்ட மூத்த படைவீரர்கள், மூத்த அதிகாரிகள், தூதரக முன்னாள் அதிகாரிகள் உள்ளிட்ட முன்னாள் அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள் உட்பட 150க்கும் மேற்பட்டோர் கையொப்பமிட்டு, டிசம்பர் 31ஆம் தேதி, மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் மாண்புமிகு பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தின் நகலை இத்துடன் இணைத்துள்ளேன்” என்று அக்கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
“நாட்டில் உள்ள முக்கிய சிறுபான்மை சமூகமான இஸ்லாமியர்களையும் பிற சிறுபான்மையினரையும் குறிவைத்து வெறுப்பூட்டும் வன்முறை பேச்சுக்கள் அதிகரித்து வருவது குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலையை அக்கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளோம். குறிப்பிட்டு சொல்வதானால், ஹரித்வாரில் டிசம்பர் 17ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை நடந்த தர்ம சன்சத் நிகழ்ச்சியையும் டெல்லியில் நடந்த இதேபோன்ற ஒரு நிகழ்ச்சியையும் சொல்லலாம். அந்நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பேச்சாளர்கள் வெளிப்படையாக இந்திய இஸ்லாமியர்களுக்கு எதிராக இனப்படுகொலைக்கு அழைப்பு விடுக்கும் வகையில் பேசியுள்ளனர்” என்று லக்ஷ்மிநாராயண் ராம்தாஸ் தெரிவித்துள்ளார்.
காந்தியைக் கொன்றவர்: இஸ்லாமிய வெறுப்பு அரசியலுக்கு கோட்சேவை சாவர்க்கர் பயன்படுத்தியது எப்படி?
“நீங்கள் தேர்தலை அறிவித்துவிட்டீர்கள். ஆனால், இதே போன்ற நிகழ்ச்சிகள் மற்ற இடங்களில் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகின்றன. இது அரசியலமைப்புச் சட்டம் மற்றும் தேர்தல் நன்னடத்தை விதிகள் என இரண்டையும் மீறும் செயலாகும்” என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திராவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் லக்ஷ்மிநாராயண் ராம்தாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
உத்தரகண்ட் மாநில ஹரித்வாரில் நடந்த தர்ம சன்சத் நிக்ழச்சியில், சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறையைத் தூண்டிய விவகாரத்தில், யதி நரசிம்மானந்த், ஜிதேந்திர தியாகி, சத்வி அன்னப்பூர்னா உள்ளிட்ட பத்து பேர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று(ஜனவரி 14), இவ்வழக்கில் தொடர்பாக, அண்மையில் இஸ்லாம் மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறிய ஜிதேந்திர தியாகி என்ற இந்து மத சாமியார் கைது செய்யப்பட்டார்.
ஹரித்வார் வெறுப்புப் பேச்சு வழக்கில் முதல் கைது: காவல்துறையினருக்கு சாபம்விட்ட யதி நரசிம்மானந்த்
இவ்வழக்கில் செய்யப்படும் முதல் கைது நடவடிக்கை இதுவாகும்.
இவ்விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றவர்களான யதி நரசிம்மானந்த் மற்றும் சத்வி அன்னப்பூர்னா ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
Source: The Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.