இந்தியாவில் இன்று (நவம்பர் 16) தேசிய பத்திரிகையாளர்கள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நேரத்தில் 180 நாடுகள் கொண்ட உலக பத்திரிகை சுதந்திரத்திற்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியா 150 ஆவது இடத்தை பெற்று மிகவும் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேசிய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட நவம்பர் 16-ம் நாள்தான், தேசிய பத்திரிகையாளர் தினமாக 1996-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பதில் முக்கிய பங்காற்றும் ஊடகம் மற்றும் தொலைக்காட்சியின் பணிகளைக் கவுரவிக்க தேசிய பத்திரிகை தினம் கொண்டாடப்படுகிறது.
“அவர் சொன்னார் – இவர் சொன்னார் என்று சொல்லாமல் உண்மை எது என்று மக்களுக்குச் சொல்வதே இதழியலின் அறம். அறம் சார்ந்து செயல்படும் இதழியலாளர்களுக்கு தேசிய பத்திரிகையாளர் தின வாழ்த்துகள் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்துரைத்துள்ளார்.
2016 ஆண்டிற்கான தரவரிசையில். இந்தியா 133 ஆவது இடத்தை பிடித்திருந்த நிலையில், 5 ஆண்டுகளில் 17 இடங்களில் சரிந்து 150வது இடத்தை பிடித்துள்ளது.
ஒவ்வொரு நாட்டிலும் பத்திரிக்கையாளர்கள், செய்தி நிறுவனங்கள் மற்றும் இணைய பயன்பாட்டாளர்கள் கொண்டிருக்கும் சுதந்திரத்தின் அளவையும் அத்தகைய சுதந்திரத்தை மதிக்க அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளையும் வைத்து உலக பத்திரிகை சுதந்திர குறியீடு நிர்ணயிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு அறிக்கையில் 142வது இடத்திலிருந்த இந்தியா மோசமான பத்திரிக்கை சுதந்திரங்கள் கொண்ட உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றிருந்தது.
“பத்திரிகையாளர்களுக்கு எதிரான வன்முறை, அரசியல் சார்புடைய ஊடகங்கள் மற்றும் ஊடக உரிமைகள் பறிப்பு போன்ற நிகழ்வுகள், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில் பத்திரிக்கை சுதந்திரம் நெருக்கடியில் உள்ளது என்பதை நிரூபித்துள்ளது. 2014 ஆண்டு பாஜகவைச் சேர்ந்த மோடியின் ஆட்சி தொடங்கியதிலிருந்து இந்து தேசியவாதத்தை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காலனித்துவ எதிர்ப்பு இயக்கத்தின் விளைவாக, இந்திய பத்திரிகைகள் மிகவும் முற்போக்கானவையாகக் கருதப்பட்டன, ஆனால் 2010 களில் நடுப்பகுதியில் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றதிலிருந்து நிலைமை தலைகீழாக மாறியது. பாஜக உறுப்பினர்கள் மற்றும் பாஜகவிற்கு ஆதரவானவர்களால் ஊடக நிறுவனங்களை கட்டுப்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. 80 கோடி இந்தியர்களால் பின்தொடரப்படும் 70க்கும் அதிகமான ஊடக நிறுவனங்களுக்கு உரிமையாளர் மோடியின் நண்பரும் தொழிலதிபருமான முகேஷ் அம்பானி என்பதே முதன்மையான உதாரணம்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்று காலத்தில் அரசின் முரணான அறிக்கைகளுக்கு எதிராக செய்தி வெளியிட்ட ஊடகங்கள் மீது வழக்குப் பதியப்பட்டது. கொரோனா தொடர்பாக செய்தி வெளியிட்டதற்காக 55 பத்திரிக்கையாளர்கள் மீது வழக்குப் பதியப்பட்டு கைது செய்யப்பட்டதை எல்லைகளற்ற பத்திரிகையாளர்கள் அமைப்பின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Source : the wire
ஏப்பத்துக்கு கூட வரி போடுவீங்களா? | GST தர முடியாதுனு மிரட்டும் மம்தா | Aransei Roast | BJP | GST
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.