Aran Sei

ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டம்: 10 நாட்களுக்குள் திரும்பப் பெறாவிட்டால் அரசுக்கு ஒத்துழைக்க மாட்டோம் – நாகா மக்கள் எச்சரிக்கை

நாகாலாந்தில் இராணுவத்தால் கொல்லப்பட்ட பொதுமக்கள் பதினான்கு பேருக்கு நீதி வேண்டியும், மாநிலத்தில் ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்யக் கோரியும் போராடி வரும் அம்மாநில பழங்குடி அமைப்புகள், கோரிக்கைகளை நிறைவேற்ற அம்மாநில அரசிற்கு 10 நாட்கள் கெடு நீட்டிப்பு வழங்கியுள்ளனர்.

நேற்று முன்தினம்(ஜனவரி 14), கொன்யாக் யூனியன், கொன்யாக் நியுபு ஷேகோ கோங், கொன்யாக் மாணவர் சங்கம் உட்பட பல கொன்யாக் பழங்குடியின சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நடைபெற்றுள்ளது. அக்கூட்டத்தில், நாகாலாந்து காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கையை வெளியிடுவதில் ஏற்படும் தாமதத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 14 அன்று அறிவிக்கப்பட்ட, இராணுவத்துடனான ‘முழு ஒத்துழையாமை’ இயக்கமானது நீதி கிடைக்கும் வரை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரத்திற்கு எதிராக சமர் புரியும் நாகாலாந்து மக்கள் – பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதிவேண்டி நடைபயணம்

“அரசிற்கான இறுதி எச்சரிக்கையானது ஜனவரி 15ஆம் தேதியில் இருந்து 10 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு தவறும்பட்சத்தில், கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பு ஒப்புதல் அளித்தபடி, பழங்குடியினர் அனைத்து தேசிய நிகழ்வுகளிலிருந்தும் விலகி இருப்பார்கள்” என்று ஒருங்கிணைப்புக் குழுக்களின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பு என்பது நாகாலந்தில் உள்ள மோன், துயென்சாங், லாங்லெங், கிஃபிர் மற்றும் நோக்லாக் ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள ஆறு நாகா பழங்குடியினரின் அமைப்பாகும்.

இது கொன்யாக் அமைப்புகளால் வழங்கப்பட்ட இரண்டாவது இறுதி எச்சரிக்கையாகும். இதற்கு முன்னர், அரசுக்கு வழங்கப்பட்ட 30 நாள் கெடு காலம், ஜனவரி 10 அன்று முடிவடைந்தது. அதனைத்தொடர்ந்து, நேற்று முன்தினம்(ஜனவரி 14), கொன்யாக் பழங்குடியின சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டத்தில் இந்த புதிய காலக்கெடு முடிவு செய்யப்பட்டுள்ளது.

Source: NDTV

ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டம்: 10 நாட்களுக்குள் திரும்பப் பெறாவிட்டால் அரசுக்கு ஒத்துழைக்க மாட்டோம் – நாகா மக்கள் எச்சரிக்கை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்