Aran Sei

நாகாலாந்தில் ராணுவத்தால் மக்கள் கொல்லப்பட்ட விவகாரம் – விசாரணைக் குழு அறிக்கையைப் பொதுவில் வெளியிட மாணவர் அமைப்பு கோரிக்கை

டிசம்பர் 4ஆம் தேதி நாகாலாந்து மாநில மோன் மாவட்டத்தில் இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, நாகாலாந்து அரசால் அமைக்கப்பட்ட சிறப்புப் விசாரணை குழுவின் அறிக்கையை பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இக்கொலை தொடர்பாக உயர்மட்ட சிறப்பு விசாரணைக் குழு உரிய விசாரணை மேற்கொண்டு, சட்டத்தின்படி நீதி வழங்கும் என்று நாகாலாந்து முதலமைச்சர் நெய்பியு ரியோ டிசம்பர் 5ஆம் தேதி உறுதியளித்திருந்தார்.

இந்நிலையில், சிறப்புப் விசாரணை குழு தனது இடைக்கால அறிக்கையை நேற்று முன்தினம்(ஜனவரி 10) மாநில அரசிடம் சமர்ப்பித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

ராணுவ துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட நாகா மக்கள் – அறிக்கையை சமர்பித்த சிறப்பு விசாரணைக் குழு

21 பாரா கமெண்டோக்களிடம் மட்டுமே டிசம்பர் 30ஆம் தேதி வரை விசாரணை நடத்தப்பட்டதாகவும், வேறு சில விவகாரங்கள் தொடர்பான விசாரணைகள் நடந்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இறுதி அறிக்கை இன்னும் சமர்ப்பிக்கப்படாமல் உள்ளதற்கு இவைதான் காரணங்கள் என்றும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

நாகா மக்களின் உரிமைகளுக்காக செயல்படும் அமைப்பான குளோபல் நாகா ஃபோரம் (ஜிஎன்எஃப்), நாகாலாந்து மாநில அரசு இடைக்கால அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

குளோபல் நாகா ஃபோரம்மின் ஒருங்கிணைப்பாளர் கன்வீனர் சுபா ஒசுகும், சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கை முடிவுகளை வெளியிடுவதன் வழியாக, அனைவருக்கும் உண்மை நிலையைப் புரிய வைக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

அதிகாரத்திற்கு எதிராக சமர் புரியும் நாகாலாந்து மக்கள் – பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதிவேண்டி நடைபயணம்

அசாம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் உள்ள நாகா மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கிடையே இயங்கும் அமைப்பான நாகா மாணவர் கூட்டமைப்பு, விசாரணை அறிக்கை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும் என்றும் கோரியுள்ளது.

திமாபூரைச் சேர்ந்த கொன்யாக் பழங்குடியினரின் அமைப்பும் இதே கோரிக்கையை எழுப்பியுள்ளது.

Source: PTI

நாகாலாந்தில் ராணுவத்தால் மக்கள் கொல்லப்பட்ட விவகாரம் – விசாரணைக் குழு அறிக்கையைப் பொதுவில் வெளியிட மாணவர் அமைப்பு கோரிக்கை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்