பெங்களூரு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, இனி நிகழ்ச்சிகள் நடத்தப் போவதில்லை என்று நகைச்சுவைக் கலைஞர் ஃபரூக்கி அறிவித்துள்ளார்.
இன்று (28.11.21) பெங்களூருவில் நடைபெறவிருந்த ஃபரூக்கியின் நிகழ்ச்சிக்கு, பல்வேறு அமைப்புகள் சார்பாக எதிர்ப்பு எழுந்துள்ளதாகவும், ஆகவே, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறும் பெங்களுரு காவல்துறை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கேட்டுக்கொண்டதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இந்துத்துவ அமைப்புகள் மிரட்டல் – நிகழ்ச்சியை ரத்து செய்த நகைச்சுவைக் கலைஞர் முனாவர் ஃபரூக்கி
இதுதொடர்பாக பெங்களுரு காவல்துறை சார்பாக நேற்று (27.11.21) இரவு, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் வழங்கப்பட்ட கடிதத்தில், நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்புகள், நிகழ்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாகவும் இதனால் பொதுஅமைதிக்கும் நல்லிணக்கத்திற்கும் பாதிப்பு ஏற்படாலம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முனாவர் ஃபரூக்கி, தான் செய்யாத தவறுக்கு சிறையில் அடைக்கப்பட்டதாகவும், கடந்த இரண்டு மாதங்களில் நிகழ்ச்சி நடத்தும் இடம் மற்றும் பார்வையாளர்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் காரணமாக, தனது 12 நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும், “இதுவே இறுதி என்று நினைக்கிறேன். எனது பெயர் முனாவர் ஃபரூக்கி, நீங்கள் என்னுடைய சிறந்த ரசிகர்களாக இருந்துள்ளீர்கள், அது ஒரு அழகிய காலம். இத்துடன் முடித்துக்கொள்கிறேன். விடைபெறுகிறேன்” என்று ஃபரூக்கி உணர்வுப்பூர்வமாக டிவிட்டர் பதிவிட்டுள்ளார்.
திட்டமிட்டு குறிவைக்கப்படுவதால் ஃபரூக்கி மிகவும் மனசோர்வடைந்திருப்பதாக இன்றைய நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளதாக தி இந்து கூறுகிறது.
முன்னதாக, ‘இந்து ஜன்ஜாகுருதி சமிதி’ என்ற அமைப்பு சார்பாக, பரூக்கியின் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி, பெங்களுரு காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆணையருக்கு அளிக்கப்பட்ட அந்த மனுவை டிவிட்டரில் பதிவிட்ட அந்த அமைப்பு, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, உள்துறை அமைச்சர் அரகா ஜனானேந்தா ஆகியோரின் ட்விட்டர் கணக்கையும் அதில் இணைத்திருந்தது.
கர்நாடகாவை சேர்நத் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் மற்றும் பேராசிரியர் எம்.எம்.கல்புர்கி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ‘இந்து ஜன்ஜாகுருதி சமிதி’ அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் என்று கூறப்படுவதாக தி இந்து தெரிவித்துள்ளது.
பரூக்கியின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதற்கு பெங்களூருவில் உள்ள செயல்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வழக்கறிஞர் மற்றும் செயற்பாட்டாளர் வினை ஸ்ரீனிவாசா பரூக்கி இஸ்லாமியர் என்பதற்காகவே இந்துத்துவாவினர் அவருக்கு எதிராக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக கூறியதாக தி இந்து தெரிவிக்கிறது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம், இந்து கடவுள்களை தவறாக சித்தரித்தார் என்று இந்துத்துவாவினர் அளித்த புகாரின் பேரில், ஃபரூக்கி இந்தூரில் கைது செய்யப்பட்டார். 37 நாட்கள் சிறையில் இருந்த ஃபரூக்கிக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கியது.
ஏற்கனவே மகாராஷ்ட்ரா மற்றும் குஜராத் மாநிலங்களில் நடைபெறவிருந்த ஃபரூக்கியின் நிகழ்ச்சிகள் இந்துத்துவாவினரின் மிரட்டல் காரணமாக ரத்து செய்யப்பட்டது றிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.