மத்தியபிரதேச மாநிலம், சத்தார்பூர் மாவட்டத்தில் உள்ள பவுடி கிராமத்தைச் சேர்ந்தவர் லக்ஷ்மன் அகிர்வார். இவரது 4 வயது மகளுக்குக் கடந்த திங்கள்கிழமை உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அருகில் உள்ள பக்ஸ்வாகா சுகாதார மையத்துக்குக் குடும்பத்தினர் அழைத்துச் சென்றார். அங்குச் சிறுமியின் உடல்நிலை மோசம் அடைந்தது. இதையடுத்து அவரை அருகில் உள்ள தாமோஹ் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும் சிகிச்சை பலனின்றி அதே நாளில் சிறுமி உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து சிறுமியின் உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல அவரது தாத்தா மன்சுக் அகிர்வார், மருத்துவமனை ஊழியர்களிடம் அமரர் ஊர்தி கேட்டதாகவும் ஆனால் அவர்கள் மறுத்துவிட்டதாகவும் சிறுமியின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
இதையடுத்து அவர்கள், சிறுமியின் உடலைப் போர்வையில் சுற்றி பேருந்துமூலம் பக்ஸ்வாகா எடுத்துவந்தனர். பிறகு அங்கிருந்து கிராமத்துக்குச் செல்ல தனி வாகனத்துக்குப் பண வசதி இல்லாததால் பக்ஸ்வாகா நகர பஞ்சாயத்தை சிறுமியின் தந்தை லக்ஷ்மன் அணுகியுள்ளார்.
ஆனால் அவர்களும் வாகன ஏற்பாடு செய்ய மறுத்துவிட்டதால், லக்ஷ்மன் வேறு வழியின்றி தனது மகளின் உடலைத் தானே தனது தோளில் சுமந்து சென்றுள்ளார்.
ஆனால் சிறுமி குடும்பத்தினரின் குற்றச்சாட்டைத் தாமோஹ் மாவட்ட மருத்துவமனை அதிகாரி மம்தா திமோரி மறுத்துள்ளார். “எங்களிடம் அமரர் ஊர்தி உள்ளது. செஞ்சிலுவை சங்கம் அல்லது பிறதொண்டு நிறுவனங்கள்மூலம் எங்களால் அமரர் ஊர்தி வசதி செய்துதர முடியும். ஆனால் அமரர் ஊர்தி கேட்டு என்னை யாரும் அணுகவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் இதே போன்று இன்னொரு சம்பவம் நடந்துள்ளது. பகவான்தாஸ் என்பவர் தனது சகோதரனின் சடலத்தைக் கதகோட்டா சுகாதார மையத்திலிருந்து கை வண்டியியில் எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது. அதிகாரிகள் அமரர் ஊர்தி தர மறுத்துவிட்டதால் உடலைக் கை வண்டியில் எடுத்துவந்ததாக பகவான்தாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து வட்டார மருத்துவ அதிகாரி சூயஷ் சிங்காய் கூறும்போது, “நோயாளி இறந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார். அவரது குடும்பத்தினரிடம் பணியில் இருந்த மருத்துவர் பிரேதப் பரிசோதனைக்கு அறிவுறுத்தியதால் அவர்களே உடலை எடுத்துச் சென்றுவிட்டனர்” என்று தெரிவித்துள்ளார்.
ம.பி.யின் கர்கான் மாவட்டம், பகவன்புராவில் கர்ப்பிணி பெண் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு வரும் வழியில் உயிரிழந்துள்ளார். அரசு ஆம்புலன்ஸ் வசதிக்குப் பலமுறை முயன்றபோதும் கிடைக்கவில்லை என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
Source: The Hindu
அம்பேத்கருக்கு எதிராக கலவரம் செய்த சாதிவெறியர்கள் | Amalapuram Ambedkar Issue
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.