சசிகலாவின் விடுதலையை வரவேற்பதாகவும் அவர் விடுதலையாகி வந்து தமிழக அரசியலில் பங்கு பெற வேண்டும் என்றும் ஒரு பெண்ணாக அவருக்கு முழு ஆதரவு தருவதாகவும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
தேமுதிக சார்பில் செங்கல்பட்டு மாவட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்காக ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பொது உறுப்பினர்கள், பூத் முகவர்கள், செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் மாங்காடு அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
அங்குப் பேசிய அவர், “ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத தேர்தல். திமுக, அதிமுகவுக்கும் முதல் தேர்தல். இதனால் யாரும் பெரிய ஆள் என நினைக்க வேண்டாம். எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காது எனத் தேர்தல் கணிப்பு கூறுகிறது. தேமுதிக ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. இப்போது வரை அதிமுக ஆட்சியில் இருக்க முக்கிய காரணம் தேமுதிகதான். பாஜக சின்னத்தைத் தமிழகம் முழுக்க கொண்டு சென்றவர் விஜயகாந்த். தேமுதிக ராசியான கட்சி” என்று கூறியுள்ளார்.
6 தொகுதியில் வெற்றி பெற்றால்தான் தேமுதிக அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக வரும். தேர்தல் அறிக்கையைக் கொடுத்துப் புரட்சியை ஏற்படுத்தியவர் விஜயகாந்த் என்று கூறிய பிரேமலதா, விஜயகாந்த் சொல்லிய திட்டத்தை ஆந்திராவிலும், டெல்லியிலும் கொண்டு வந்து கடைபிடிக்கின்றனர் என்றும் கூறியுள்ளார்.
மேலும் கூறிய அவர்,“எனக்கு இரண்டு பணி. ஒன்று விஜயகாந்த்தை காக்க வேண்டும். அவர் உருவாக்கிய கட்சியைச் சிறிதும் சரியாமல் காக்க வேண்டும்.தேர்தல் கிளைமாக்சுக்கு வரத் தயாராக உள்ளது. இந்தச் சட்டமன்றத் தேர்தலில் எனது குரல் ஒலிக்க வேண்டும் என்றால் யாராலும் தடுக்க முடியாது. விஜயகாந்த் அனுமதி கொடுத்து ஆண்டவன் அருள் இருந்தால் தேர்தலில் போட்டியிடுவேன். எந்தத் தொகுதி என்று தெரியாது. நல்ல முடிவாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.
ஒரு பெண் என்ற முறையில் சசிகலா விடுதலையை வரவேற்பதாகக் கூறிய அவர், ஜெயலலிதாவிற்காகவே வாழ்ந்தவர் சசிகலா என்றும் தெரிவித்துள்ளார்.
“சசிகலாவுக்கு என்று தனி வாழ்க்கை கிடையாது. அவர்களால் ஆதாயம் பெற்றவர்கள் அதிகமாக உள்ளார்கள். தற்போது அவரை வேண்டாம் என்று சொல்வது மனதுக்கு கடினமாக உள்ளது. அவரது விடுதலையை வரவேற்கிறேன். அவர் விடுதலையாகி வந்து தமிழக அரசியலில் பங்கு பெற ஒரு பெண்ணாக முழு ஆதரவு தருகிறேன்” என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.