மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்துப் பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் போராடி வருகின்றனர். இதில் பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகளுக்குப் பெரும் பங்கு உள்ளது. இந்நிலையில், இந்திய ரயில்வே நிறுவனம் (ஐஆர்சிடிசி), டிசம்பர் 8 முதல் டிசம்பர் 12 வரை அதன் வாடிக்கையாளர்களுக்கு 2 கோடி மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளது. அதில், சீக்கிய சமூகத்தை ஆதரிப்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி எடுத்த 13 முடிவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன என்று தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய ரயில்வே நிறுவனம் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். இந்த நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு, பிரதமர் மோடி சீக்கியர்களுடன் கொண்ட உறவைப் பறைசாற்றும் வகையிலான 47 பக்கக் கையேட்டை மின்னஞ்சல் செய்துள்ளது. “இது பொது நலன் கருதியும், அரசு கொண்டுவரும் மசோதாக்கள் குறித்து மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனும் நோக்கத்துடனும் செய்யப்பட்டுள்ளது” என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்தக் கையேடுகள் இந்தி, ஆங்கிலம் மற்றும் பஞ்சாபி மொழிகளில் உள்ளன.
டிசம்பர் 12-ம் தேதி மின்னஞ்சல்கள் அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு முன் இந்திய ரயில்வே நிறுவனத்தின் தரவுத்தளத்தில் உள்ள அனைவர்க்கும் இந்த மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன. பயணிகள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும்போது அவர்களின் விவரங்களைப் பதிவு செய்வார்கள். அதில், குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிகளுக்கு இந்தக் கையேடுகள் அனுப்பப்பட்டுள்ளன.
சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டதாக வெளியான செய்திகளை இந்திய ரயில்வே நிறுவனம் மறுத்துள்ளது.
“எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்தையும் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் அஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன. இது முதல் முறை அல்ல. பொது நலன் கருதி இதற்கு முன்பு கூட அரசின் திட்டங்களை இந்திய ரயில்வே நிறுவனம் ஊக்குவித்துள்ளது” என்று இந்திய ரயில்வே நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
1984-ம் ஆண்டு கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நீதி, ஜாலியன்வாலா பாக் நினைவிடம், கர்த்தர்பூர் நடைபாதை கட்டுமானம் ஆகியவை இந்தக் கையேட்டில் இடம்பிடித்துள்ளன.
குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு டிசம்பர் 1-ம் தேதி மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் இந்தக் கையேட்டை வெளியிட்டனர்.
மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திருத்துவதற்கு முன்வந்துள்ள நிலையில், சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் எனும் கோரிக்கையில் விவசாயிகள் தீர்க்கமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.