மேற்கு வங்க மாநிலம் ஹூக்லி மாவட்டத்தில், நேற்று (22.02.21) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, திரிணாமுல் காங்கிரஸ் அரசு வாக்கு வங்கி அரசியலுக்காக தேசப்பற்றை சமரசம் செய்கிறது என குற்றம்சாட்டினார்.
‘வந்தே மாதரம்’ பாடலை எழுதிய, பக்கிம் சந்திர சட்டோபாத்தாய், ஹூக்லி மாவட்டத்தின் துணை ஆட்சியராக பணிபுரிந்த 5 ஆண்டு காலத்தில், அவர் வாழ்ந்த வந்தே மாதரம் பவன் சிதலமைடைந்திருக்கிறது என மோடி குற்றம் சாட்டினார்.
திரிணாமுல் எம்.பி வீட்டிற்கு சென்ற மம்தா பானர்ஜி – சிபிஐ விசாரணை நடைபெறும் நிலையில் வருகை
ஹூக்லி நதிக்கரையில், சின்சுரா நகரில் அமைந்திருக்கும் பக்கீம் சந்திர சாட்டோத்தாய் வாழ்ந்த வீடு, வந்தே மாதரம் பவன் என அழைக்கப்படுகிறது.
”பக்கீம் சந்திரா ஐந்து ஆண்டுகள் வாழ்ந்த, வந்தே மாதரம் பவன் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வந்தே மாதரம் பாடல் உருவான வீடு. வந்தே மாதரம் பாடல், இந்திய சுதந்திர போராட்டத்திற்கு புதிய உத்வேகத்தோடு, போராட்டக்காரர்களுக்குப் புதிய சக்தியைக் கொடுத்தது. இந்தப் பாடலை எழுதியவரின் வீட்டைப் பராமரிக்காமல் இருப்பது, மேற்கு வங்க மக்களுக்குச் செய்யும் அநீதி” என மோடி குற்றம்சாட்டினார்.
”இதற்குப் பின்னால் பெரிய அரசியல் இருக்கிறது. இந்த அரசு தேசபக்தியை விட வாக்கு வங்கி அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது” எனவும் மோடி கூறினார்
உண்மை சரிபார்ப்பு
மோடி கூறிய குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை அறிய, தி வயர் இணையதளம் மேற்கொண்ட தேடலில், உண்மை வேறாக இருப்பது தெரியவந்துள்ளது.
’வந்தே மாதரம் பவன்’ என்றழைக்கப்படும் அந்தக் கட்டிடம் நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறது என்றும், கட்டிடத்திற்கு வெள்ளை வண்ணத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டிருப்பதோடு, வீட்டின் நுழைவாயிலில் பக்கிம் சந்திராவின் சிலை ஒன்று வைக்கப்பட்டிருப்பதாகவும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடு அமைந்திருக்கும் பகுதியில் உள்ள நதிக்கரையும், பராமரிக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டிருப்பதாக தி வயர் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ‘ஹூக்லி ஹெரிடேஜ்’ என்ற முகநூல் பக்கத்தின் நிர்வாகிகளில் ஒருவரான சங்கா சுபா கங்குலி, “இந்தக் கட்டிடம் சிதலமைடைந்த நிலையில் இல்லை. இது முறையாக சுத்தப்படுத்தப்பட்டு, பராமரிக்கப்படுகிறது. வீட்டில் இருக்கும் புகைப்பட கண்காட்சி மேம்படுத்தப்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால் மொத்தத்தில் வீடு மோசமான நிலையில் இல்லை” எனக் கூறியுள்ளதாக, தி வயர் தெரிவித்துள்ளது.
ஜூன் 28, 2020 ஆம் தேதி, பக்கீம் சந்திராவின் பிறந்த நாளில் எடுக்கப்பட்ட காணொளி மற்றும் ஜூலை 19, 2020 ஆம் தேதி வீட்டிற்கு வெளியில் இருக்கும் சிலைக்குத் திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் சந்தரிமா பட்டாச்சார்யா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தபன் தாஸ்குப்தா, அசித் மஜும்தார் மலர்துவி மரியாதை செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட காணொளிகள் கட்டிடம் நல்ல நிலையில் இருப்பதை காட்டுவதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.