டாஸ்மாக் கடைகளின் பார் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் என மொத்தமாக 1000 பேர் சேர்ந்து இன்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டை முற்றுகையிட்டனர்.
டாஸ்மாக் கடைகளில் மதுக்கடைகளை நடத்துவதற்கு விடப்படும் டெண்டர்களில் முறைகேடு நடப்பதாகவும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் வற்புறுத்தலால் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் இந்த ஒப்பந்தம் வழங்கப்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர். இப்போராட்டத்தில் அமைச்சரைக் கேலி செய்யும் பல்வேறு பதாகைகளையும் போராட்டக்காரர்கள் பிடித்திருந்தார்.
டாஸ்மாக் பார் டெண்டர் விடுவதில் பல முறைகேடுகள் நடந்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் பார்களை நடத்துவதற்கான ஒப்பந்தம் ஒரு சிலருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளாக இத்தொழிலை நாங்கள் நடத்தி வருகிறோம். இப்போது அமைச்சர் மற்றும் அவரது சகோதரரின் வற்புறுத்தலின் பேரில் ஒரு சிலருக்கு மட்டுமே ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது,” என்று டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் அன்பரசன் கூறியுள்ளார்.
சென்னை மாவட்டத்தில் கடந்த மாதம் டாஸ்மாக் பார் டெண்டர் விடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“டாஸ்மாக் பார் டெண்டர் விடும் செயல்முறை வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும். அதில் எந்த அரசியல் தலையீடும் இருக்கக் கூடாது, டெண்டரை நடத்தும் அதிகாரிகள் நியாயமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இருக்க வேண்டும். இத்தனை ஆண்டுகளாகத் தொழில் செய்து வரும் அனைவரையும் இதில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்,” எனச் சங்கச் செயலர் பாலமுருகன் கூறியுள்ளார்.
இப்பிரச்சனை தொடர்பாக அமைச்சரைச் சந்தித்துப் பேசுவதற்குச் சங்கப் பிரதிநிதிகள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்படாததால் அமைச்சரின் வீட்டின் முன்பு போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 500 பேரை காவல்துறை கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
Source : TheHindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.