குடியுரிமை திருத்தச் சட்டத்தின் விதிகளை உருவாக்க, மாநிலங்களவை மற்றும் மக்களவையில் உள்ள நாடாளுமன்றக் குழுக்களிடமிருந்து ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் கூடுதல் காலக்கெடுவை கோரியுள்ளது என்று ஒன்றிய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மூன்றாவது முறையாகவும் கடைசியாகவும் நீட்டிக்கப்பட்ட காலக்கெடு ஜனவரி 9 அன்று முடிவடைந்த நிலையில், உள்துறை அமைச்சகம் உரிய விதிகளை இன்னும் அறிவிக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, ஜனவரி 10 அன்று தி இந்து செய்தி செய்தி வெளியிட்டிருந்தது.
இது குறித்து மாநிலங்களவையில் உள்ள அதிகாரி ஒருவர் கூறுகையில், உள்துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது என்றும் ஆனால் துணைச் சட்டங்களுக்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவர் பிரதப் சிங் பஜ்வா பஞ்சாப் தேர்தல் தொடர்பாக பயணத்தில் இருப்பதால், கால நீட்டிப்பு குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்.
விதிகள் வகுக்கப்படாமல், குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த முடியாது. கடந்த நவம்பர் மாதம் மக்களவை குழு கால நீட்டிப்பு வழங்கியது. மக்களவை குழுவின் தலைவராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் பாலசோவ்ரி வல்லபனேனி உள்ளார்.
2019ஆம் ஆண்டு ஒன்றிய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், சமண மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்க, குடியுரிமை மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
இந்திய நாடாளுமன்ற விதிகளின்படி, ஒரு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துவிட்டால், அடுத்த ஆறு மாதத்துக்குள் அந்தச் சட்டத்துக்கான விதிகளை வகுக்க வேண்டும் அல்லது அவகாசம் பெற வேண்டும் என்பது நினைவுகூரத்தக்கது.
Source: The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.